வான் எல்லைக்குள் ஊடுருவிய ‘ட்ரோனை’ சுட்டு வீழ்த்திய லட்வியா

வான் எல்லைக்குள் ஊடுருவிய ‘ட்ரோனை’ சுட்டு வீழ்த்திய லட்வியா

2 mins read
c0063d58-dc2a-40b9-8b67-acf8731b5893
உளவு பார்ப்பதற்கு ராணுவங்கள் பயன்படுத்தும் ஆளில்லா வானூர்தியின் (ட்ரோன்) மாதிரி வடிவம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

லட்வியா: அனுமதியின்றி அதன் வான் எல்லைக்குள் ஊடுருவிய ஆளில்லா வானூர்தியை லட்வியாவின் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான தற்காப்பு நடைமுறைகளின்படி அது நடத்தப்பட்டதாக லட்விய ஆயுதப் படை எக்ஸ் சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அதிகாலை பதிவிட்டது.

லட்விய ஆயுதப் படைகள் ரஷ்யா அருகில் உள்ள அதன் வான் பகுதிகளுக்கு விடுத்திருந்த விழிப்புணர்வு எச்சரிக்கையையும் சம்பவத்துக்குப் பிறகு விலக்கியது.

ரஷ்யாவுடன் எல்லையைப் பகிரும் நேட்டோ தற்காப்புக் கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பு நாடான பின்லாந்து, அதன் வான் பகுதிகளுக்குத் தற்காலிகத் தடை விதித்திருந்தது. பாதுகாப்பு நடவடிக்கையாக அந்நாட்டின் கிழக்கு வளைகுடாவில் உள்ள கடற்பகுதிக்கான போக்குவரத்துக்கும் பின்லாந்து தடை ஏற்படுத்தியிருந்தது.

ஆளில்லா வானூர்திகளைத் தடுக்கும் விதமாக செய்யப்பட்ட அந்நடவடிக்கைகளின் விவரங்களை பின்லாந்தின் தற்காப்புப் படை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.

சுட்டுவீழ்த்தப்பட்ட ‘ட்ரோன்’ குறித்தும் அது எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விவரங்களையும் லட்வியா உடனடியாக வெளியிடவில்லை.

ரஷ்யாவின் அண்டை நாடுகள் அடிக்கடி ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களுக்கான எச்சரிக்கைகளை விடுப்பதுடன், அவற்றை சுட்டு வீழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. பிப்ரவரி 2022ல் உக்ரேன் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்து முழுமையாக தாக்குதல் நடத்தத் தொடங்கியது முதல் இது நடந்துவருகிறது.

இதற்கிடையே, ரஷ்யாவின் இரண்டாம் பெரிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே லெனின்கிராட் வட்டாரத்தில் 15 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய ஆளுநர் அலெக்சான்டர் ட்ரொஸ்டென்கோ டெலிகிராம் செயலியில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.

நீர் அணைகள், மின்நிலையங்கள், இயற்கை எரிவாயு கட்டமைப்புகள் போன்றவற்றைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை நேட்டோ நாடுகள் தீவிரப்படுத்திவருகின்றன.

ரஷ்யா ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு அந்நாடுகள்மீது தாக்குதல்கள் நடத்தி அவற்றுக்கு உக்ரேன் காரணம் என்று பழிசுமத்தத் திட்டமிட்டுள்ளது என்று அவை அஞ்சுவதால் அவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்