தொலைந்த பணப்பை: மீட்டுக்கொடுத்த மலேசிய அதிகாரிகள்

தொலைந்த பணப்பை: மீட்டுக்கொடுத்த மலேசிய அதிகாரிகள்

படம்:THE STAR/ASIA NEWS NETWORK

29 Nov 2025 - 6:03 pm

2 mins read

ஜோகூர் பாரு: நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ள நவம்பர் 3ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் ஜோகூர் பாரு சென்றிருந்த சிங்கப்பூர் தம்பதிகள், வீடு திரும்பும்போது, பணம் வைத்திருந்த கைப்பை காணாமல் போனதை உணர்ந்தனர்.

அது கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் 36 வயதான திரு டான் செங் குவாங் என்பவர் இருந்துள்ளார். அப்பணப்பையில் S$4,700 (RM15,000) இருந்தது.

அதேசமயம் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் சுங்கத் துறை, குடிநுழைவு வளாகத்தில் பணியில் இருந்த மலேசிய அதிகாரிகளால் அந்தப் பணப்பை கண்டெடுக்கப்பட்டதை திரு டான் அறிந்திருக்கவில்லை.

அவர்கள் ஜோகூர் பாருவில் இயங்கும் சிங்கப்பூர் துணைத் தூதரகத்தை நாடியுள்ளனர்.

மூன்று நாள்கள் தங்கியிருந்த பிறகு நள்ளிரவில் வீடு திரும்பிய திரு டான், ஜோகூரின் சோதனைச் சாவடியில் பணப்பையைத் தொலைந்துவிட்டதை அறியவில்லை.

“மிகவும் களைப்பாக இருந்த நாங்கள் பணம், கட்டண அட்டைகள், ஆவணங்கள் என பலவற்றை இழந்துள்ளதை வீடு திரும்பியபோதுதான் உணர்ந்தோம்,” என்றார் அவர்.

தம்பதிகள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகிகளையும் தொடர்புகொண்டு விசாரிக்க அவர்களும் எதையும் காணவில்லை என்று கூறிவிட்டனர்.

“முதலில் எனது படத்துடன் துணைத் தூதரக அதிகாரி தொலைபேசியில் அழைத்தபோது, அது மோசடியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் சிங்கப்பூர் துணைத் தூதரகம் எங்களை அழைத்து பணப்பை கண்டெடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது,” என்றார் திரு டான்.

இம்மாதம் 21ஆம் தேதி அவர் ஜோகூர் பாருவுக்குச் சென்று பணப்பையைப் பெற்றுக்கொண்டார். தனிப்பட்ட முறையில் பையைத் திருப்பித் தந்த மலேசிய அதிகாரிகளை அவர் பாராட்டினார்.

“பையில் இருந்த அனைத்தும் இருந்தபடியே உள்ளன. சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் வழியாக என்னைத் தொடர்புகொண்ட மலேசிய அதிகாரிகளின் நிபுணத்துவத்துக்கும் நேர்மைக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்றார்.

மலேசிய உள்துறை அமைச்சின் அதிகாரி, பையைக் கண்டெடுத்த அதிகாரிகளைப் பாராட்டினார். அந்த இரு அதிகாரிகளும் கார் சோதனைக்கான வழித்தடத்தில் பை கிடப்பதைப் பார்த்தனர். கண்காணிப்புக் கேமராக்களில் வாகனப் பதிவு எண்ணை அடையாளம் கண்டு, சிங்கப்பூர் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொண்டனர். துணைத் தூதரகம் திரு டானை தொடர்புகொள்ள உதவியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பணப்பைஜோகூர் பாருஅதிகாரிதூதரகம்உதவி