கோலாலம்பூர்: சிங்கப்பூர், இந்தோனீசியா, ஹாங்காங் நாடுகளைத் தொடர்ந்து மலேசியாவும் நிபா கிருமித் தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மலேசியாவின் எல்லா அனைத்துலக சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு, சுகாதாரப் பரிசோதனைகளைச் சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மலேசிய விமான நிலையங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
குறிப்பாக, நெரிசலான அல்லது நெருக்கடியான பகுதிகளில் முகக்கவசம் அணியுமாறும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மலேசியாவில் நிபா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், 2025 டிசம்பர் முதல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் இருவருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் பரிசோதிக்கப்படுகின்றனர். சுங்கத் துறை சோதனைச் சாவடிகளில் விலங்குப் பொருள்கள் மீதான சோதனைகளை அதிகரித்து வருகின்றன.
பழந்தின்னி வெளவால்கள், பன்றிகள் போன்ற விலங்குகளால் பரப்பப்படும் நிபா கிருமி, காய்ச்சல், மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இறப்பு ஏற்படுவது 40% முதல் 75% வரை உள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடும் என்றாலும், அத்தனை எளிதாகப் பரவுவதில்லை.
இது பொதுவாக பாதிக்கப்பட்ட வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது, அல்லது அவற்றால் மாசுபடுத்தப்பட்ட பழங்களிலிருந்து பரவுகிறது.

