கோலாலம்பூர்: மலேசியாவின் தளர்வு அளிக்கப்பட்ட புதிய ஏற்றுமதி விதிகளின் கீழ், ஆய்வுப் பணிகளுக்காக அமெரிக்காவிற்கு அரிய வகை மண் தனிமங்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கப் பெரும்பான்மை உரிமையுடைய ‘டிடிஇசி மினரல் அண்ட் மெட்டல் டெக்னாலஜி’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேராக் மாநிலத்திலிருந்து 700 மெட்ரிக் டன் வரையிலான அரிய கரிம மண் ஏற்றுமதிக்கு இச்சலுகை அனுமதிப்பதாக நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மிலன் பேர்லி தெரிவித்தார்.
முதற்கட்டமாக 30 டன் கரிம மண் இந்த வார இறுதியில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் மலேசியாவில் பிறந்த பேர்லி உட்பட அமெரிக்கக் குடிமக்களுக்கு 51 விழுக்காடு பங்குகள் உள்ளன.
மலேசியாவின் களிமண் படிவுகளிலிருந்து அரிய வகை மண் கூறுகளைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கும் இவை அனுப்பப்படும்.
முன்னதாக 2024ல் அரிய வகைத் தனிமங்களின் ஏற்றுமதிக்கு மலேசியா தடை விதித்திருந்தது.
எனினும், உள்ளூர் சுத்திகரிப்புத் திறனை மேம்படுத்தவும் சீனாவை மட்டுமே சார்ந்திருப்பத்தைக் குறைக்கவும் அக்டோபரில் நிபந்தனைகளுடன் கூடிய ஆய்வு ஏற்றுமதி வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மலேசியாவில் சுத்திகரிப்பு ஆலை ஒன்றைக் கட்ட டிடிஇசி திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்காவின் இஎக்ஸ்ஐஎம் வங்கி மூலம் 650 மில்லியன் டாலர் (S$833.1 மில்லியன்) வரை நிதியுதவி பெற ஆதரவுக் கடிதம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவில் கிட்டத்தட்ட 16.1 மில்லியன் மெட்ரிக் டன் அரிய வகை மண் படிவுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், அதைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் குறைவாகவே உள்ளது. சுற்றுச்சூழல் கவலைகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளாகத் தயக்கம் காட்டி வந்த மலேசியா, தற்போது அரிய வகை மண் துறையில் வெளிநாட்டு முதலீடுகளைத் தீவிரமாக ஈர்த்து வருகிறது. சீனா அல்லாத பிற வழிகளில் அரிய வகை மண்ணைப் பெற முயலும் அமெரிக்காவிற்கு, மலேசியாவின் இந்த முனைப்பு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
