கோலாலம்பூர்: பதப்படுத்தப்படாத அரிய கனமவளத்தின் ஒரு தொகுதியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரிய வகை கனிமவளம் தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்கும் உள்ளூர் உற்பத்தித்திறனில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் வழிவகுக்கும் புதிய விதிமுறைகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள முதல் அனுமதி இதுவாகும்.
ஆய்வு, உருவாக்க நோக்கங்களுக்காகச் செய்யப்பட்ட ஒரே ஓர் ஏற்றுமதி விண்ணப்பத்துக்கு மட்டும் மலேசியக் கனிம, புவியறிவியல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்ததாக புளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களையோ இதர கூடுதல் தகவல்களையோ அமைச்சு வெளியிடவில்லை.
தொடர்புடைய சட்ட அமலாக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் அந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.
மேலும், ஒப்புதல் அளிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல என்றும் முதலீடுகளின் தரம், தொழில்நுட்பப் பரிமாற்றம், நீண்டகால மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
