மலேசிய-சீன உறவு நிலைத்து நிற்கும்: துணைப் பிரதமர் ஸாஹிட்

2 mins read
5e9a580c-b4be-42f0-854f-cd3a8d31b233
சீனா-மலேசியா இருதரப்பு வணிகமானது 2025 தொடக்கத்தில் ஐந்து முதல் ஏழு விழுக்காடுவரை உயர்ந்து, சென்ற மே மாதத்தில் 200 பில்லியனைக் கடந்ததாக மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மற்ற எந்த நாட்டுடனும் செய்துகொள்ளும் வணிக உடன்பாட்டால் மலேசியா-சீனா உறவு பாதிக்கப்படாது என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

புத்தாக்கம், முதலீட்டு ஈர்ப்பு, மக்கள் தொடர்பு போன்றவற்றை மேம்படுத்த சீனா, ஆசியான், அனைத்துலக நாடுகளுடன் மலேசியா தொடர்ந்து சிறந்த ஒத்துழைப்பை நல்கும் என்று அவர் கூறினார்.

அனைத்துலகச் சீனப் பொருளியல், தொழில்நுட்ப உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டாக்டர் ஸாஹிட், விரைவாக மாறிவரும் உலகில் பங்காளித்துவமே மலேசியாவின் வலுவான சொத்தாகத் திகழ்கிறது என்று சொன்னார்.

சீனாவுடனான மலேசியாவின் உறவு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

“ஏனெனில் ஆசியானும் சீனாவும் சேர்ந்து வளரும்போது நம் இளையர்கள், நம் தொழில் நிறுவனங்கள், நம் சமூகங்கள் என எல்லாருமே வெற்றிபெறுகிறோம். அத்துடன் செழிப்பான, நிலைத்தன்மைமிக்க, அனைவர்க்குமான எதிர்காலத்தையும் நாம் ஒன்றாக வடிவமைக்கிறோம்,” என்று டாக்டர் ஸாஹிட் பேசினார்.

மலேசிய-சீன உறவானது நடைமுறைக்கேற்ற, உத்திமுறை சார்ந்த, எதிர்காலத்தை நோக்கிய உறவாக நீடிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசியான் - சீனா தடையற்ற வணிக வட்டாரம் மேம்படுத்தப்பட்டிருப்பது அதற்கு வலுவான பொருளியல் ஊக்கத்தை அளித்துவருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2008ஆம் அண்டில் 192.5 பில்லியன் அமெரிக்க டாலராக (799 பில்லியன் ரிங்கிட்) இருந்த ஆசியான் - சீனா வணிகமானது, 2024ஆம் ஆண்டில் 982 பில்லியன் அமெரிக்க டாலராக (4.075 டிரில்லியன் ரிங்கிட்) உயர்ந்திருப்பதை டாக்டர் ஸாஹிட் சுட்டிக்காட்டினார்.

மேலும் சீனா-மலேசியா இருதரப்பு வணிகம் 2025 தொடக்கத்தில் ஐந்து முதல் ஏழு விழுக்காடுவரை உயர்ந்து, சென்ற மே மாதத்தில் 200 பில்லியனைக் கடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நமது பங்காளித்துவம் உண்மையானது, நடைமுறைக்கேற்றது, உறுதிமிக்கது. செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல், தானியக்கம், தொழில்நுட்பக் கல்வி ஆகிய துறைகளில் சீனா மிக விரைவாக வளர்கிறது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,” என்றார் டாக்டர் ஸாஹிட்.

வேறு சில முன்னணி அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து கேஎஸ்ஐ ஆசிய பசிபிக் உத்திமுறை நிலையம் புதன்கிழமையன்று (நவம்பர் 19) நடந்த அந்த ஒருநாள் உச்சநிலை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்புச் சொற்கள்