கோலாலம்பூர்: மலேசியா தனது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை மின்னிலக்கமயமாக்குவதில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதன் மூலம் மருத்துவப் பயணத் துறைக்கு மெருகூட்டுவதும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் கிராமங்களைச் சென்றடைய வகைசெய்வதும் அந்நாட்டின் இலக்குகளாகும்.
சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மலேசிய மத்திய வங்கி 2.6 பில்லியன் ரிங்கிட் (788 மில்லியன் வெள்ளி) நிதியுதவி வழங்கும் என்று மலேசியாவின் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸில் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
“பல சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களை அறிவார்ந்த மருத்துவமனைகளாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தப்படும்,” என்று திரு ஃபாமி குறிப்பிட்டார்.
“சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை நாங்கள் சாதகமாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறோம். ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் மின்னிலக்க, தொலைத்தொடர்புக் கட்டமைப்புகள் சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணம் கொண்டுள்ளோம்,” என்றும் கூறினார் அவர்.
ஈராண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கம், பெருந்திட்டங்களுக்குப் பதிலாக நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. பொருளியல் வளர்ச்சிக்கு மெருகூட்டி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் எண்ணமாகும்.
மலேசியாவில் நான்கு ஆண்டுகளில் நால்வர் பிரதமர் பதவியை வகித்திருக்கின்றனர். அந்த அரசியல் நிலையற்ற தன்மை மறுசீரமைப்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது.
“எங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் நாட்டின் வளர்ச்சிப் பாதையை சீராக்குவது, நிதியைச் சரியான முறையில் செலவிடுவது, பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி வைப்பது ஆகிய முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது,” என்றார் திரு ஃபாமி.
தொடர்புடைய செய்திகள்
கிராமங்களில் இணைய சுகாதாரச் சேவைகள் போன்றவற்றை வழங்க மலேசியா அதன் 5ஜி உள்கட்டமைப்பை உபயோகிக்கிறது. அதன் மூலம் மக்கள் தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்குப் போகாமல் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று திரு ஃபாமி குறிப்பிட்டார்.