தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய எரிவாயுக் குழாய் வெடிப்பு: அகழ் இயந்திரம் புதைந்துபோயிருக்கலாம்

2 mins read
d5cf27b2-5b91-4a81-a6db-54feb83542e2
புத்ரா ஹைட்சில் வெடிப்பு நிகழ்ந்த பகுதி. - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயுக் குழாய் வெடிப்பு நேர்ந்த இடத்துக்கு முப்பதே மீட்டர் தொலைவில் ஒரு நிறுவனம் தீவிரமான அகழ் பணிகளை மேற்கொண்டது காவல்துறை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிலாங்கூர் காவல்துறை ஆணையர் ஹுசைன் ஒமர் கான் இத்தகவலை வெளியிட்டார். அப்பகுதியின் நிலத்தடியில் இருந்த கழிவு முறையை மாற்ற அகழ் பணி இயந்திரமும் (excavator) ‘பேக்ஹோ’ (backhoe) இயந்திரமும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அப்பணிகள் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி நிறைவடைந்தது. எரிவாயுக் குழாய் வெடிப்புக்குப் பிறகு அகழ் பணி இயந்திரம் மண்ணுக்குள் புதைந்துபோயிருக்கும் என்று நம்பப்படுவதாக திரு ஹுசைன் சொன்னார்.

வெடிப்பு நிகழ்வதற்கு முதல் நாள் ‘பேக்ஹோ’ இயந்திரம், சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டிருந்ததாகவும் அதேவேளை அகழ் பணி இயந்திரம் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டது. சம்பவ இடத்தைச் சுற்றிய பகுதியில் நிலம் நிலையற்று இருந்ததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளும்போது இடையூறுகள் இருப்பதாக திரு ஹுசைன் தெரிவித்தார்.

“வெடிப்பு, அந்தப் பகுதி அமைந்திருத்த விதத்தை மாற்றிவிட்டது. அதனால் ஏழு மீட்டர் ஆழமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட குழி உருவாகியுள்ளது. அதைச் சுற்றி பொதுவாக வெடிப்பால் ஏற்படும் பள்ளம் (crater) உருவாகியிருக்கிறது, நிலம் திடமின்றி இருக்கிறது,” என்று அவர் விவரித்தார்.

பாதுகாப்பான முறையில் விசாரணை மேற்கொள்ள பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியிருக்கும் பகுதியில் மணலை உறுதியாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். புத்ரா ஹைட்சில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றுக்கு அருகே இருக்கும் தற்காலிக நடவடிக்கை நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு ஹுசைன் பேசினார்.

முதற்கட்ட விசாரணை முடிவுகளைக் கொண்ட அறிக்கையைத் தயார்செய்ய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் திரு ஹுசைன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்