தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா: லங்காவிக்கு அருகே மியன்மார் அகதிப் படகுகள் வெளியேற்றப்பட்டன

1 mins read
a862bd9c-3dd4-4cdf-ae7b-2825adc8380e
மியன்மாரில் அவதிப்படும் ரோஹிங்யா மக்கள் புகலிடம் தேடி பல்வேறு நாடுகளுக்குப் படகுகள் மூலம் செல்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மியன்மாரிலிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏறக்குறைய 300 குடியேறிகளைச் சுமந்து வந்த இரண்டு படகுகள் மலேசியக் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

மலேசியக் கடல்துறை அமலாக்க அமைப்பு, ஜனவரி 4ஆம் தேதி இத்தகவலை வெளியிட்டது.

அவ்விரு படகுகளும் ஜனவரி 3ஆம் தேதி மாலை லங்காவிக்கு தென்மேற்கே இரண்டு கடல் மைல் (3.7 கிலோமீட்டர்) தொலைவில் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அந்தப் படகுகளை வெளியேற்றுவதற்குமுன் உணவு, சுத்தமான குடிநீர் போன்றவை வழங்கப்பட்டதாக மலேசியக் கடல்துறை அமலாக்க அமைப்பின் தலைமை இயக்குநர் முகமது ரோஸ்லி அப்துல்லா கூறினார்.

இந்தப் படகுகளின் நடமாட்டம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள தாய்லாந்து அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றிவருவதாகவும் அவர் சொன்னார்.

ஜனவரி 3ஆம் தேதி, மலேசியக் காவல்துறையினர் லங்காவிக்கு அருகே தரைதட்டிய படகிலிருந்த ஏறக்குறைய 200 பேரைத் தடுத்துவைத்தனர். அவர்கள் மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்யா அகதிகள் என்று சந்தேகிக்கப்பட்டது.

மியன்மாரின் அவதிப்படும் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலேசியாவுக்கோ பங்ளாதேஷிலுள்ள அகதி முகாம்களுக்கோ செல்கின்றனர்.

உயிரைப் பணயம் வைத்து மாதக்கணக்கில் படகில் பயணம் செய்தோ தாய்லாந்துடனான எல்லைப் பகுதியில் தரைவழியாகவோ மலேசியாவுக்குள் அவர்கள் நுழைகின்றனர்.

அத்தகையோர் பிடிபட்டால் பெரும்பாலும் அகதிகள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். அந்த முகாம்களில் ஏற்கெனவே அதிகமானோர் தங்கியுள்ளதாகவும் அங்கு அசுத்தமான சூழல் நிலவுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்