எஃப்ஏ- 50எம் போர் விமானத்தைப் பெற்ற மலேசியா ஆகாயப் படை

எஃப்ஏ- 50எம் போர் விமானத்தைப் பெற்ற மலேசியா ஆகாயப் படை

படம்: மலேசியத் தற்காப்பு அமைச்சு

30 Oct 2026 - 8:36 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் ஆகாயப் படை அதன் முதல் எஃப்ஏ- 50எம் இலகுரக போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டது. மலேசிய மண்ணில் அது, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) தரையிறக்கப்பட்டது.

மலேசிய ஆகாயப் படையின் முத்திரைகொண்ட சாம்பல் நிற போர் விமானம் தென்கொரியாவிலிருந்து புறப்பட்டு லாபுவான் ஆகாயப்படைத் தளத்தில் பிற்பகலில் இறங்கியது.

தற்காப்பு அமைச்சர் முகமது காலிட் நுர்டின், தற்காப்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் லொக்மான் ஹக்கிம் அலி ஆகியோர் போர் விமானம் தரையிறங்கியதைப் பார்வையிட்டனர். 18 எஃப்ஏ- 50எம் இலகுரக போர் விமானத்தைக் கொள்முதல் செய்ய 2023ஆம் ஆண்டு தென்கொரியாவின் வான்வெளித் துறையுடன் மலேசியா ஒப்பந்தம் செய்துகொண்டதாகத் திரு காலிட் சொன்னார்.

“ஆகாயப் படையின் தற்போதைய ஹாக் ரக போர் விமானங்கள் 2028ஆம் ஆண்டு செயல்பாட்டிலிருந்து நீக்கப்படவிருப்பதால் புது ரக விமானங்களைக் கொள்முதல் செய்வது மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

தென்கொரியாவில் இருந்து புறப்பட்ட இரண்டு போர் விமானங்கள் பிலிப்பீன்சிற்குச் சென்று பின் மலேசியாவில் வந்திறங்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகப் பகிர்ந்துகொண்ட அவர், ஒரு விமானம் மட்டும் தற்போது வந்ததாகக் குறிப்பிட்டார்.

“தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மற்றொரு விமானம் வரவில்லை. அது நாளைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் திரு காலிட்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் ஆறு எஃப்ஏ- 50எம் இலகுரக போர் விமானத்தை மலேசியா பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2028ஆம் ஆண்டுக்குள் 18 விமானங்களும் மலேசியாவை வந்தடைந்துவிடும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்