கோலாலம்பூர்: உலகின் ஆகப் பழைய, கௌரவமிக்க அறிவியல் கல்விக் கழகமான ராயல் சொசைட்டியின் உறுப்பினராக மலேசியரான டாக்டர் ரவிகாதேவி சம்பந்தமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராயல் சொசைட்டியின் உறுப்பினராக மலேசியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
டாக்டர் ரவிகாதேவி மலேசிய அறிவியல் கல்விக் கழகத்தைச் சேர்ந்தவர்.
இவ்வாண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் உறுப்பினராக டாக்டர் ரவிகாதேவி அதிகாரபூர்வமாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சு புதன்கிழமை (மே 21) கூறியது.
உயிரியல் தொழில்நுட்பத்தில் முன்னோடியான டாக்டர் ரவிகாதேவி, 2010ஆம் ஆண்டில் மலேசிய அறிவியல் கல்விக் கழகத்தில் சேர்ந்தார்.
அங்குள்ள உயிரியல், விவசாயம், சுற்றுப்புற அறிவியல் துறைக்கு அவர் தலைமை தாங்குகிறார்.
உலக அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.
அவரது புத்தாக்கத் திறன் உலகளவில் நன்மையைத் தந்திருப்பதாக அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
டாக்டர் ரவிகாதேவி செம்பனை எண்ணெய் தொடர்பாக ஆய்வு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

