மலேசியப் பொருளியல் மூன்றாம் காலாண்டில் 5.2% வளர்ச்சி

2 mins read
8ecbfec8-9461-4ac5-9e2c-f2e41e7fbf06
மலேசிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர். - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: வலுவான ஏற்றுமதி, முதலீடுகள் மற்றும் நீடித்த வீட்டுச் செலவுகள் தொடர்ந்து வளர்ச்சியைத் தூண்டியுள்ளதால், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 5.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவும் மலேசியப் புள்ளிவிவரத் துறையும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்தன.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொருளியல் பெரும்பாலும் முந்தைய காலாண்டைவிட மீட்சி கண்டது. ஒவ்வொரு மாதத்திலும் வளர்ச்சி ஐந்து விழுக்காட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது.

மூன்றாம் காலாண்டுச் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மலேசியப் பொருளியல் வளர்ச்சி 4.0 முதல் 4.8 விழுக்காடு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.

“இப்போதைய நிலையில், பொருளியல் வளர்ச்சியை மேல்நோக்கித் திருத்தும் பாதையில் நாங்கள் இருப்பதாகத் தெரிகிறது,” என்று மலேசிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் கோலாலம்பூரில் நடந்த ஓர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய வளர்ச்சியால் வீட்டுச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்தன. இந்தப் போக்கு ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்று மத்திய வங்கி கூறியது. இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று மாதங்களில் தனியார் நுகர்வு சற்று மிதமாக உள்ளது. அது முன்பு 5.3 விழுக்காடாக இருந்தத அது இப்போது 5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதற்கிடையே, தனியார் மற்றும் பொது முதலீடுகள் தொடர்ந்து துடிப்பாக உள்ளன. உள்கட்டமைப்புத் திட்டங்களில் முன்னேற்றம், அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை நிறைவேற்றுதல், தேசியப் பெருந்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியவை வளர்ச்சியை மேல்நோக்கி வைத்திருக்க உதவும் என்றும் திரு அப்துல் ரஷீத் கூறினார்.

ஜூலை-செப்டம்பர் மாதங்களில் நிகர ஏற்றுமதி மீண்டும் உயர்ந்தது. நாட்டின் ஏற்றுமதியைவிட இறக்குமதி குறைவாக இருப்பதால் 17 விழுக்காட்டுக்கும் மேலாக அது உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மூலாதாரப் பணவீக்கம் 1.3 விழுக்காடாகவே இருந்தது. ஆனால் முந்தைய ஆண்டை விட மொத்தப் பணவீக்கம் 2 விழுக்காடாக உயர்ந்தது.

மொத்தப் பணவீக்கம் மூலாதாரப் பணவீக்கத்திற்கு உத்வேகத்தை அளித்தது. ஆனால் மின்சாரம், டீசல் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக விலைகளில் ஏற்பட்ட சரிவுகளால் இது ஈடுசெய்யப்பட்டது என்று மத்திய வங்கி விளக்கியது.

மத்திய வங்கியின் மதிப்பீடுகளின்படி, வருடாந்தர மொத்தப் பணவீக்க வளர்ச்சி ஒரு விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலையேற்றம் மிதமாக இருப்பதால் வளர்ச்சியை ஆதரிக்க வர்த்தக வங்கிகளின் கடன் கொள்கை விகிதம் 2.75 விழுக்காடாக வைக்கப்பட்டுள்ளதாகத் திரு அப்துல் ரஷீத் கூறினார்.

குறிப்புச் சொற்கள்