கோலாலம்பூர்: மலேசியா குறைவாகக் கடன் வாங்குகிறது, ஆனால் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சும்பங்கான் துனாய் ரஹ்மா, சும்பங்கான் அசாஸ் ரஹ்மா திட்டங்களுக்கு 16 பில்லியன் ரிங்கிட், அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 18 பில்லியன் ரிங்கிட், எரிபொருள் மானியங்களுக்காக 40 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் கூறினார்.
புதிய அரசாங்கக் கடன் வாங்குதல் 2021, 2022ஆம் ஆண்டுகளில் 100 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து, 2023ல் 92.6 பில்லியன் ரிங்கிட்டாகவும் 2024ல் 76.8 பில்லியன் ரிங்கிட்டாகவும் கடந்த ஆண்டு 75.6 பில்லியன் ரிங்கிட்டாகவும் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
“நமது கடன் குறைந்து வருகிறது. நாம் வாங்கும் கடனும் குறைந்துள்ளது. அதே வேளையில் செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன,” என்று வியாழக்கிழமையன்று (நவம்பர் 12) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமருக்கான கேள்வி நேரத்தில் அவர் சொன்னார்.
(பக்கத்தான் ஹரப்பான்- ஈப்போ தீமோர்) உறுப்பினர் ஹோவர்ட் லீ, தேசியக் கடன் ஏன் இன்னும் நிலையான நிலைக்குக் குறைக்கப்படவில்லை என்பதையும் நாட்டின் நிதி நிலை மத்திய கிழக்கு மோதலை மேலும் அதிகரிப்பதற்குப் பதிலளிக்க போதுமான இடத்தை அளித்ததா என்பதையும் அறிய விரும்பினார்.
நிதிப் பற்றாக்குறையானது 2021ல் 6.4 விழுக்காட்டிலிருந்து, 2022ஆம் ஆண்டு 3.3 விழுக்காடாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகத் திரு அன்வார் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் கடன்-ஜிடிபி விகிதம், நடப்பாண்டில் 65.2 விழுக்காட்டிலிருந்து 64 விழுக்காடாகவும், அடுத்த ஆண்டு 63 விழுக்காடாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2018ஆம் ஆண்டின் கடன் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும் என்று திரு அன்வார் கூறினார். ஏனெனில், அக்காலகட்டத்தில் கணக்கீடுகளில் வரவு-செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்புகள் சேர்க்கப்படவில்லை. ஆனால் தற்போதைய முறையில் அவை கணக்கில் கொள்ளப்படுகின்றன என்றார்.
4,000 ரிங்கிட் வருமானம் தேவைப்படுகிறது
இதற்கிடையே, பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்துவதை அரசாங்கம் பரிசீலிக்கும் முன் மலேசியர்கள் குறைந்தபட்சம் 4,000 ரிங்கிட் சம்பாதிக்க வேண்டும் என்று திரு அன்வார் கூறுகிறார்.
தற்போதைய வருமான நிலைகள் மிகவும் குறைவாகவே இருப்பதால், பரந்த அளவிலான வரி விதிப்பு சாதாரண மலேசியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.
