தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய முன்னாள் பிரதமர் ஊழல் வழக்கில் தொடர்புடைய $54.6 மில்லியன் பறிமுதல்: ஊடகம்

2 mins read
141293b2-b638-4fc7-ac72-c25cdb5ac60f
திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான ஊழல் வழக்கில் தொடர்புடைய 177 மில்லியன் ரிங்கிட் (S$54.6 மில்லியன்) மதிப்பிலான சொத்துகள், ரொக்கத்தை நிரந்தரமாகப் பறிமுதல் செய்யத் திட்டமிடுவதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக அந்தச் சொத்துகளையும் ரொக்கத்தையும் ஆணையம் தற்காலிகமாகப் பறிமுதல் செய்திருந்தது.

அவற்றை நிரந்தரமாகப் பறிமுதல் செய்வதற்கான கோரிக்கையை அரசாங்கத் தரப்பு இரு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்வைக்கும் என்று ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பக்கி ஜூன் 25ஆம் தேதி கூறியதாகத் தகவல் வெளியானது.

திரு இஸ்மாயில் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தபோது நடந்ததாகக் கூறப்படும் ஊழல், விளம்பரங்ளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கை போன்றவற்றின் மீது ஊழல் வழக்கு கவனம் செலுத்தியது.

அதன் தொடர்பிலான விசாரணை முடிவடைந்ததாகத் திரு அஸாம் கூறினார்.

65 வயதாகும் திரு இஸ்மாயில் மலேசியப் பிரதமராக, மிகக் குறைவான காலம் பதவி வகித்தவர்.

2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் பதவியேற்றார். ஆனால், அந்த ஆண்டு அக்டோபரில் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

தற்போதைய பிரதமர் அன்வார் இப்ராகிம் மேற்கொள்ளும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின்கீழ் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வலையில் சிக்கிய முன்னாள் பிரதமர்களில் திரு இஸ்மாயிலும் ஒருவர்.

அவருக்குமுன் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்த முகைதீன் யாசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மற்றொரு முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக் அரசாங்க நிதியான 1எம்டிபி தொடர்பான ஊழல் குற்றங்களுக்காக சிறைத்தண்டனையை நிறைவேற்றிவருகிறார்.

முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது மீது மற்றொரு வழக்கில் விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்