பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிலேயே ஆக உயரமான வேல் என்று மலேசியக் கூட்டரசுப் பிரதேசமான லபுவானில் உள்ள இந்துக் கோயிலில் நிறுவப்பட்ட வேல் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலின் உயரம் 13.18 மீட்டராகும்.
லபுவானில் உள்ள திருமுருகன் கோவிலில் நிறுவப்பட்டுள்ள இந்த வேல், மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கான மலேசிய சாதனைப் புத்தகச் சான்றிதழ் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 15) நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக லபுவானில் உள்ள இந்துச் சமூகத்தினரின் ஆன்மீக மையமாகத் திகழ்ந்து வரும் இக்கோயிலின் வரலாற்றில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும்.
முருகப்பெருமானுடன் தொடர்புடைய புனிதச் சின்னமான வேல், தெய்வீக ஞானம், வீரம், நீதி, பாதுகாப்பு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகக் கோயிலின் அறங்காவலரும் ஆலோசகருமான திரு சுப்பிரமணியம் முனியாண்டி தெரிவித்தார்.
கோயிலுக்கு மலேசிய சாதனைப் புத்தகச் சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பேசிய அவர், சமய முக்கியத்துவத்துடன் லபுவானின் பல்லினப் பண்பாட்டு அடையாளத்துக்குப் பங்களிக்கும், அதன் பன்முக மரபுடைமை குறித்த மேலான புரிதலை ஊக்குவிக்கும் ஒரு கலாசார அடையாளச் சின்னமாக இந்த வேல் திகழும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
நிறுவப்பட்ட வேல் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், கலாசார ஆர்வலர்கள் ஆகியோரை ஈர்க்கும் என்றும் அதே வேளையில், இளைய தலைமுறையினர் தங்களது சமய, கலாசாரப் பாரம்பரியங்களைப் பாதுகாக்க ஊக்கமளிக்கும் எனத் திரு சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.
லபுவானில் இந்திய ராணுவச் சமூகத்தினர் இருந்த ஆரம்பக் காலத்தில் ஒரு சிறிய வழிபாட்டுத் தலமாகத் தொடங்கப்பட்ட இக்கோயில், படிப்படியாக ஒரு முக்கிய ஆன்மீக மையமாக வளர்ச்சியடைந்ததாக அவர் அதன் வரலாற்றை நினைவுகூர்ந்தார்.
இக்கோயிலில் 1992 , 2004 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பெரிய குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டதாகவும் 2018ஆம் ஆண்டில் கோயில் நிர்வாகக் குழுச் சங்கங்களின் பதிவாளரிடம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
