நூறு கிலோ எடை விழுந்து ஆடவர் உயிரிழப்பு

2 mins read
9623fdf3-e75b-4d00-887a-d406885b866f
பக்கத்திற்கு 50 கிலோ எடை தாங்கிய இந்த பார்பெல் கருவி, ஆடவரின்மீது விழுந்து கழுத்தை நசுக்கியது. - காணொளிப்படம்: வெய்போ

பெய்ஜிங்: உடற்பயிற்சி நிலையத்தில் நூறு கிலோ எடையைத் தூக்கியபோது, அது தவறி விழுந்து கழுத்தை நசுக்கியதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை சீனாவின் வூகான் நகரில் நிகழ்ந்தது.

அந்நாளன்று பிற்பகலில் அங்குள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் பயிற்சி செய்துகொண்டிருந்தார் ஸாங் என்ற அந்த 25 வயது ஆடவர்.

மேசைமீது படுத்த நிலையில் செய்யும் ‘பெஞ்ச் பிரஸ்’ பயிற்சியின்போது, அவர் 100 கிலோ எடைகொண்ட ‘பார்பெல்’ எடைக்கருவியைத் தூக்க முயன்றார். அப்போது அவரருகில் உதவிக்கு ஒருவரும் இல்லை.

அப்போது அது தவறி விழுந்து அவரது கழுத்தை நசுக்கியது.

கிட்டத்தட்ட 25 நொடிகளாகப் போராடியும் அவரால் அதிலிருந்து விடுபட இயலவில்லை.

இதுகுறித்த காணொளி சைனா பிரஸ் உள்ளிட்ட பல சீனச் செய்தித்தளங்களில் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகே அவரது நிலையை அங்கிருந்த மற்றவர்கள் கண்டனர். உடற்பயிற்சி நிலைய ஊழியர்கள் இருவர் ஓடிவந்து, ஸாங்கை நசுக்கியிருந்த எடைக்கருவியை அகற்றினர்.

உடனடியாக ஸாங்கை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஸாங் அந்த உடற்பயிற்சி நிலையத்திற்கு அடிக்கடி வந்து, அதிக எடை தூக்கி பயிற்சி செய்வதைத் தாம் கண்டிருப்பதாக ‘வூகான் பாஃபிக்’ உடலுறுதி மன்றப் பேராளர் ஒருவர் கூறினார்.

ஆனால், உதவிக்கு அருகே ஒருவரும் இல்லாமல் 100 கிலோவிற்குமேல் ஸாங் ஏன் தூக்க முயன்றாரெனத் தெரியவில்லை என்றும் அவர் சொன்னார்.

ஸாங்கின் இறப்பு குறித்துக் காவல்துறை விசாரித்து வருவதாக சைனா பிரஸ் செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
உடற்பயிற்சிசீனாஉயிரிழப்பு