தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மான்செஸ்டர் யூதர் வழிபாட்டுத் தலத் தாக்குதல்காரர் சிரியா வம்சாவளி பிரிட்டி‌ஷ்காரர்

2 mins read
9e6b9f70-11b1-4350-aeb7-b1aef120ce2b
சம்பவ இடத்தில் கூடிய செய்தியாளர்கள். - படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர்: பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 2) தாக்குதலை நடத்தியவர் சிரியா வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டி‌ஷ் ஆடவர் என்று அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இருவரைப் பலிவாங்கிய அந்தக் தாக்குதலை நடத்தியவர் 35 வயது ஜிஹாத் அல்-‌ஷாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறையும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர காவல்துறையும் வெளியிட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது. மான்செஸ்டரின் ஹீட்டன் பார்க் ஹீப்ரூ கோங்கிரிகே‌ஷன் யூதர் வழிபாட்டுத் தலத்தில் வியாழக்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர், மூவர் மோசமான காயங்களுக்கு ஆளாயினர். யூதர்களுக்கு ஆக புனித நாளான யோம் கிப்புர் பண்டிகைக்காக மக்கள் அந்த வழிபாட்டுத் தலத்தில் ஒன்றுகூடியபோது தாக்குதல் நிகழ்ந்தது.

வழிபாட்டுத் தலத்துக்கு வெளியே இருந்த மக்கள் மீது தாக்குதல்காரர் வாகனத்தை மோதியதாகக் காவல்துறை தெரிவித்தது. பிறகு தாக்குதல்காரர் மக்களைக் கத்தியால் தாக்கியதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

அதன் பின்னர் காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றனர்.

தாக்குதல்காரர் அணிந்திருந்த மேலங்கியில் வெடிகுண்டு இருந்ததுபோல் முதலில் தெரிந்திருக்கிறது. எனினும், அது செயல்படக்கூடியது அல்ல என்பது பிறகு தெரிய வந்தது.

அல்-‌ஷாமி சிறு பிள்ளையாக இருக்கும்போது பிரிட்டனுக்கு வந்தார். பிறகு பெரியவராவதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு அவருக்கு பிரிட்டி‌ஷ் குடியுரிமை வழங்கப்பட்டதாக தகவல் தெரிந்த ஒருவர் கூறினார்.

இச்சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்றும் யூதர்கள் என்ற காரணத்தால்தான் வழிபாட்டுத் தலத்தில் இருந்த மக்கள் தாக்கப்பட்டனர் என்றும் பிரிட்டி‌ஷ் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தொலைக்காட்சிவழி ஆற்றிய உரையில் சொன்னார். டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டிருந்த அவர், இச்சம்பவம் காரணமாக திட்டமிடப்பட்டதற்கு முன்னரே நாடு திரும்பினார்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஏற்பாடு செய்து அவற்றைத் தூண்டியதன் தொடர்பில் காவல்துறை மூவரைக் கைது செய்துள்ளது. 30களில் இருக்கும் ஆடவர்கள் இருவரையும் 60களில் உள்ள ஒரு மாதையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இச்சம்பவம், கடந்த பல ஆண்டுகளில் பிரிட்டனில் நிகழ்ந்துள்ள ஆக மோசமான பயங்கரவாதச் செயலாகும்.

குறிப்புச் சொற்கள்