இயற்கைப் பேரிடரால் சிலாங்கூர், பேராக்கில் பலர் பாதிப்பு

இயற்கைப் பேரிடரால் சிலாங்கூர், பேராக்கில் பலர் பாதிப்பு

படம்: த ஸ்டார்

10 Nov 2026 - 6:55 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளம், கனமழையுடனான பலத்த காற்று, நிலச்சரிவு ஆகியவை காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) காலை நிலவரப்படி 119 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 422 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை (நவம்பர் 9) 124 குடும்பங்களைச் சேர்ந்த 419 பேராக இருந்த நிலையில், தற்போது 114 குடும்பங்களைச் சேர்ந்த 410 பேராகக் குறைந்துள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் தெரிவித்தது. இவர்கள் அனைவரும் தற்போது இரண்டு மாவட்டங்களில் உள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிலாங்கூரில் கனத்த மழையுடனான பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் சபாக் பெர்னாமில் உள்ள ஸ்ரீ பெர்னாம் மண்டப நிவாரண மையத்தில் தொடர்ந்து தங்கியுள்ளனர். அத்துடன், கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று கோம்பாக்கில் நிகழ்ந்த நிலச்சரிவில் வீடுகளை இழந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், கம்போங் கெனாங்கா சமுதாயக் கூடத்தில் உள்ள நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பெருக்கு காரணமாக கோலா குபு பாருவில் உள்ள பெர்தாக் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் மேலும் நான்கு பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட எட்டுப் பேரில் இதுவரை சடலமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

ஆற்றின் மேல் பகுதியில் ஏறத்தாழ 11 பேர் இருந்ததாகவும் அவர்களில் ஆற்றுக்குள் இறங்கிய ஏழு பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆற்றைக் கடக்காத நால்வர், ஆற்றின் மறுபுறம் சிக்கிக்கொண்ட மற்றொரு குழுவைச் சேர்ந்த ஐவர் உட்பட ஒன்பது பேர் மீட்கப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்