பெய்ஜிங்: முன்னாள் சீனத் தலைவர் மாவ் ஸிதோங் இறந்து அரை நூற்றாண்டு ஆகிவிட்டது.
சீனாவை உருவாக்கிய அவரின் இறந்த நாளை சீனா புதன்கிழமை (செப்டம்பர் 9) அனுசரித்தது. அவர் தொடர்பான கவலை தரும் நினைவுகள் இன்றும் சீனாவின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கலாசாரப் புரட்சி
மாவ், 1976ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமது 82வது வயதில் காலமானார். அவரின் மறைவு, கலாசாரப் புரட்சி (Cultural Revolution) என்றழைக்கப்பட்ட காலத்துக்கான முடிவை துரிதப்படுத்தியது. 1966ஆம் ஆண்டு அவர் அந்த இயக்கத்தை அவசர அவசரமாகத் தொடங்கினார்.
அந்த இயக்கம் பெரிய தவறு என்று சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி பின்னர் கண்டனம் தெரிவித்தது. அது திரு மாவின் தவறு என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும், அக்கட்சி இன்னமும் அவரைக் கொண்டாடுகிறது. திரு மாவின் சாதனைகள், தவறுகளை விஞ்சுகின்றன என்பது வாதம்.
கலாசாரப் புரட்சியின்போது வயதாகிய நிலையில் இருந்த திரு மாவ், சில தரப்பினருக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுமாறு மாணவர்களையும் ஆதரவாளர்களையும் ஒன்றுசேர்த்து ஊக்குவித்தார். கேப்பிட்டலிஸ்ட் ஆட்சி முறையின் பாதையில் செல்வோர் என்று வகைப்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக போராட்டத்தில் இறங்குமாறு அவர் ஊக்குவித்தார்.
அதனைத் தொடர்ந்து சீனாவின் அரசியல் முறையில் விரிசல்கள் விழுந்தன. அந்நாட்டின் பொருளியல் சீர்குலைந்துபோனதோடு வன்முறை வெடித்தது, மக்கள் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆளாயினர்.
அந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற நிகழ்வுகள், அடுத்தடுத்த சீனத் தலைவர்களின் ஆட்சிக் காலங்களிலும் சுமையாக இருந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸி ஜின்பிங்
தற்போதைய சீன அதிபரான ஸி ஜின்பிங்கின் தந்தை, சீனாவின் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்தார். கலாசாரப் புரட்சிக்கு முன்பும் அது நடந்துகொண்டிருந்தபோதும் அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு அடக்குமுறைக்கு ஆளானார்.
அப்போது பதின்ம வயது ஆடவராக இருந்த ஸி, பதிலடியில் இறங்கக்கூடிய மாணவராக வகைப்படுத்தப்பட்டார்.
திரு ஸி, தமது குடும்பம் அனுபவித்த சித்திரவதைக்கோ தாம் கண்ட மற்ற துயரச் சம்பவங்களுக்கோ திரு மாவை வெளிப்படையாகக் குறைகூறியதில்லை.
அதிபர் பொறுப்புக்கு வந்த பிறகு, மாவ்க்குப் பிந்திய காலம் அவரின் கொள்கைகளை மறுக்கும் காலமாக அமையக்கூடாது என்று திரு ஸி வாதிட்டுவந்துள்ளார். திரு ஸியின் நடவடிக்கைகளும் திரு மாவின் நடவடிக்கைகளை எதிரோலிப்பதாகக் கருதப்படுகிறது.


