மணிலா: பிலிப்பீன்ஸ், சீனா இடையே கடுமையான எல்லைப் பூசல் நீடிக்கிறது. இருப்பினும், பேச்சுவார்த்தை நடத்த பிலிப்பீன்ஸ் உறுதியாக உள்ளதாகச் சீனாவுக்கான பிலிப்பீன்ஸ் தூதர் ஹைமி ஃபுளோர்குரூஸ் தெரிவித்துள்ளார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இவ்வார இறுதியில் சீனா செல்லவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறினார்.
“அரசதந்திரம், பேச்சுவார்த்தை வழிகளை நாடுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் இருநாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட விரும்புகிறோம்,” எனத் திங்கட்கிழமை (நவம்பர் 16) புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் திரு ஹைமி குறிப்பிட்டார்.
அமெரிக்க ஆதரவுடன் தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்குப் பிலிப்பீன்ஸ் உரிமை கோருவதால், அண்மை ஆண்டுகளில் சீனா-பிலிப்பீன்ஸ் உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பர்டோ தியோடோரோவின் கருத்துகளுக்கு மாறாகத் திரு ஹைமியின் கருத்து அமைந்துள்ளதாகக் கூறப்பட்டது.
“எங்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், தேவைப்படும்போது சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அதிபர் மார்க்கோஸ் அறிவுறுத்தியுள்ளார்,” என அவர் கூறினார்.
மேலும், எல்லைப் பகுதியின் ஓர் அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்காமல், சீனாவுடன் நிலையான, ஆக்ககரமான, நடைமுறைக்கேற்ற உறவைப் பேண பிலிப்பீன்ஸ் அதிபர் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்புக் கூட்டத்திற்காக அதிபர் மார்க்கோஸ் சீனாவின் ஷென்சென் நகருக்குச் செல்லவுள்ளார். முன்னதாக, 2026ஆம் ஆண்டு ஆசியான் தலைவரான அவர், நவம்பர் 16ஆம் தேதி மணிலாவில் சீனப் பிரதமர் லீ ஷியாங்கைச் சந்தித்தார்.
பிலிப்பீன்சில் பொருளியல் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. இதனால், உள்கட்டமைப்பு, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் சீனாவுடன் உறவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்நாடு உள்ளது.
இதற்கிடையே, தென்சீனக் கடல் நடத்தைக் கோட்பாடுகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகப் பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் மா. தெரேசா லாசாரோ ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) கூறினார்.
2016ஆம் ஆண்டில் தென்சீனக் கடல் மீதான சீனாவின் உரிமை கோரல்களை அனைத்துலகத் தீர்ப்பாயம் நிராகரித்தது.
