பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இருவரின் நேரடிச் சந்திப்பு, மிகவும் உன்னதமான முறையில் தலைநகர் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை (மே 14) தொடங்கியது.
“சீனாவும் அமெரிக்காவும் பங்காளிகள், எதிரிகள் அல்ல,” என்று அதிபர் ஸி தமது வரவேற்புரையில் அறிவிக்க, அதிபர் டிரம்ப், இருநாடுகளின் உறவை “மிகவும் அருமையான ஒன்று,” என்று ஏற்புரையில் பாராட்டியது, அண்மையகாலம் வரை இருவருக்கும் இடையே நிலவிவந்த கசப்பான அனுபவத்தை மறைப்பதுபோல் அமைந்தது.
திரைமறைவில் மக்கள் மாமன்றத்தில் இருபெருந் தலைவர்களும் வர்த்தகம், தொழில்நுட்பம், தைவான் விவகாரம், மத்திய கிழக்கில் ஈரானுடன் நடக்கும் போர் ஆகியவற்றைப் பற்றி விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் பேசிய சீன அதிபர், வளர்ந்துவரும் ஒரு நாடு, ஏற்கெனவே வலுவான நிலையை அடைந்த நாட்டுடன் போரிடத் திட்டமிடுமா அல்லது அந்த எண்ணத்தைக் கைவிட்டு உலகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு நிலைத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் செயலாற்றவேண்டுமா என்பதைக் கேள்வியாக வைத்தார்.
“நமது இரண்டு நாடுகளுக்கும் வேறுபாடுகளை விட பொதுவான அம்சங்கள் அதிமாக உள்ளன என நான் எண்ணுகிறேன்,” என்றார் திரு ஸி. சீன அதிபருடன் அரசாங்கப் பொதுச் சேவைத் தலைவர் சாய் சி, வெளியுறவு அமைச்சர் வாங் இருவரும் உடன் இருந்தனர்.
“சீன அமெரிக்க நல்லுறவு உலகுக்கே நன்மை பயக்கும். இருதரப்பு ஒத்துழைப்பால் லாபமே தவிர ஒருவரை ஒருவர் எதிர்ப்பதால் இழப்பே மிஞ்சும். நாம் பங்காளிகளாக இருக்கவேண்டும், எதிரிகளாக அல்ல,” என்றார் சீன அதிபர்.
சீன அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதால், இவ்வாண்டு சிறப்புமிக்கதாக அமையும் என்று அதிபர் ஸி நம்பிக்கை தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப், தமது உரையில் திரு ஸி உடனான உறவை ‘அருமையானது,’ என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“உங்களது நண்பராக இருப்பதை எண்ணி நான் பெருமைகொள்கிறேன். நாம் இருவரும் என்றுமே நட்பு பாராட்டிவருகிறோம்,” என்று கூறினார்.
“கடினமான தருணங்களில் நாம் இருவரும் அவற்றை எதிர்கொண்டுள்ளோம். நான் உங்களை அழைப்பேன், நீங்கள் என்னை அழைப்பீர்கள். மக்களுக்கு அது தெரியாது. எவ்விதப் பிரச்சினையாக இருந்தாலும் மிக விரைவாக நாம் தீர்த்துவைத்துள்ளோம்,” என்று வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ, சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்டு முன்னிலையில் அதிபர் டிரம்ப் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்க மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கான இறக்குமதி உரிமத்தை சீனா புதுப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. வியாழக்கிழமை (மே 14) புதுப்பிக்கப்பட்ட உரிமங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்று இதுகுறித்த விவரம் அறிந்த அடையாளம் வெளியிட விரும்பாத அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

