இடைத்தவணைத் தேர்தல்: அதிபர் டிரம்ப், ஒபாமா இடையே சூடுபிடிக்கும் விவாதம்

இடைத்தவணைத் தேர்தல்: அதிபர் டிரம்ப், ஒபாமா இடையே சூடுபிடிக்கும் விவாதம்

படம்: ராய்ட்டர்ஸ்

29 Oct 2026 - 5:28 pm

2 mins read

ஜார்ஜியா: தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை என்றாலும் குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இடைத் தவணைத் தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அவரவர் வேட்பாளர்களுக்கு இரு தலைவர்களும் அதரவு திரட்டிவருகின்றனர்.

இத்தேர்தலின் முடிவுகள் அமெரிக்கக் காங்கிரசில் எந்தக் கட்சிக்கு அதிக வலிமை இருக்கும் என்பதை தீர்வு செய்யும் ஒன்றாக அமைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று, மீதம் உள்ள இரண்டு ஆண்டுகளுக்கான அவரது ஆட்சியில் குடியரசுக் கட்சி வலுவிழந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.

ஆரம்பத்தில் மிக அமைதியாக இருந்துவந்த முன்னாள் அதிபர் ஒபாமா, கடந்த வாரம் தொடங்கி, அதிபர் டிரம்ப்பைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.

செனட் சபையில் உள்ள 35 இருக்கைகளுக்கும் பிரதிநிதிகள் மாளிகையின் அனைத்து 435 உறுப்பினர் பதவிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) தேர்தல் நடக்கவுள்ளது.

கட்சி சார்பற்ற ஆய்வாளர்கள், ஜனநாயகக் கட்சியினருக்கு பிரதிநிதிகள் சபையில் அதிகப் பெரும்பான்மையைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது எனவும் செனட் சபைக்கான போட்டி கடுமையாக இருக்கும் எனக் கருத்துரைத்துள்ளனர்.

ஜார்ஜியா மாநிலத்துக்கு பிரசாரம் செய்ய வந்திருந்த ஒபாமா, அங்குள்ள வாக்காளர்களை ஜனநாயக் கட்சி செனட்டர் ஜொன் ஒசோஃப்புக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார். அந்த வேட்பாளருக்கு எதிராக குடியரசுக் கட்சியின் மைக் கொலின்ஸ் போட்டியிடுகிறார்.

அவரது பேச்சின்போது, வர்த்தக வரிகளைச் சுமத்தியது, ஈரான் போரைத் தொடங்கியது போன்ற அதிபர் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாகச் சாடினார் ஒபாமா.

“தற்போது நமது முன்னே வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை அறவழியில் பார்க்கவேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“நாட்டின் செயல்திட்டம் உடைந்துபோன நிலையில் உள்ளது. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் பொய், மிரட்டல், ஏமாற்றுதல் போன்ற காரியங்களை ஆக உயரிய நிலையில் உள்ள அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். பணத்தை வைத்து மட்டுமே நாம் மதிப்பிடப்படுகிறோம் என்ற கலாசாரம் தொடர்கிறது,” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்