எதிரிக்கு ‘தீரா தலைவலி’ கொடுக்க ஏவுகணைச் சோதனை: வடகொரியா

எதிரிக்கு ‘தீரா தலைவலி’ கொடுக்க ஏவுகணைச் சோதனை: வடகொரியா

படம்: ஏஎஃப்பி

22 Sep 2026 - 3:45 pm

2 mins read

சோல்: தமது எதிரிக்குத் தீராத தலைவலியைக் கொடுக்கும் இலக்குடன் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ஏவுகணைச் சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்திவிட்டதாக அந்நாட்டு கேசிஎன்ஏ அரசு ஊடகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளது.

அச்சோதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை, தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையில் நடந்தது என அந்த ஊடகம் கூறியது. நாட்டின் தற்காப்புத் துறையின் மேம்பாட்டையும் தயார் நிலையையும் அவர் பாராட்டியதாகவும் அது குறிப்பிட்டது.

“வடகொரிய ஏவுகணை நிர்வாக அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட சோதனை, எதிரிகளுடன் போரிடும் திறன் பன்மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. அதன் விளைவுகளை எதிரிகள் விளக்கத்தேவையின்றி புரிந்துகொள்வர்,” என்று பெருமிதம் கொண்டார் திரு கிம்.

மேலும் இந்தச் சோதனை எதிரிகளுக்கு ‘தீராத தலைவலி’யைக் கொடுத்து தவிர்க்கமுடியாத கொடூரமான உணர்வைத் தந்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

என்ன விதமான ஆயுதங்கள் சோதனையில் பயன்படுத்தப்பட்டன என்பதை ஊடக அறிக்கை விளக்கவில்லை.

ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமுடைய ‘ஹைப்பர்சானிக்’ வகை ஏவுகணைகள் சோதிக்கப்பட்டிருக்கலாம் என்று தென்கொரியாவின் என்கே நியூஸ் இணைய ஊடகம் தெரிவித்தது.

கேசிஎன்ஏ ஊடகம் வெளியிட்ட புகைப்படங்கள் தலைவர் கிம், அவரது பதின்ம வயது மகளுடன் ஏவுகணை நிர்வாக அமைப்புக்கு வருகை தந்ததைக் காட்டின. அதில் அவர் ஒரு நீள்திரையில் நாட்டின் கிழக்குக் கடற்கரையோரத்தை ஏவுகணை கடந்துசெல்வதைக் காட்டும் வரைபடத்தைப் பார்வையிடுவது தெரிகிறது.

அந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ‘பாலிஸ்டிக் மிசைல்’ வகை என்று நிபுணர்களால் கூறப்படுகிறது.

அந்த ஏவுகணையில் உந்து வாகனம் ஒன்றும் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அதனைத் தாக்கவரும் ஆயுதங்களைத் தவிர்த்து விண்வெளியில் இருந்தும் தன்னிச்சையாகச் செயல்படக்கூடியது என்று அதன் செயல்முறை குறித்து விளக்கப்பட்டது.

அந்நாட்டுக் கிழக்குக் கடற்ரையோரத்திலிருந்து வடகொரியா இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சியது என்று தென்கொரியா கூறியது.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாதென்கொரியாஊடகம்சோதனைஏவுகணைராணுவப் பயிற்சிராணுவம்போர்பாவனைப் பயிற்சி