காணாமல் போன 54 மலேசியர்களின் கைப்பேசிச் சமிக்ஞைகள், நேப்பாள வெள்ளம் ஏற்பட்ட இடத்தைக் காட்டுகின்றன

காணாமல் போன 54 மலேசியர்களின் கைப்பேசிச் சமிக்ஞைகள், நேப்பாள வெள்ளம் ஏற்பட்ட இடத்தைக் காட்டுகின்றன

படம்: ராய்ட்டர்ஸ்

22 Oct 2026 - 4:23 pm

2 mins read

கோலாலம்பூர்: நேப்பாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் கைப்பேசிகளிலிருந்து பெறப்பட்ட கடைசி சமிக்ஞைகள், ‘பனிப்பாறை பெருவெள்ளம்’ தாக்கிய இடத்திலிருந்தே வந்தவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திபெத் எல்லையையொட்டிய நேப்பாளத்தின் வடக்கு மலைப்பகுதியில், மிகப்பெரிய பனிப்பாறைச் சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குடியிருப்புகள் புதையுண்டன. இந்தச் சம்பவத்தில் 1,300 முதல் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 54 மலேசியர்களும் அடங்குவர்.

“சுனாமி போன்ற திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பாதையும், எங்களுக்குக் கிடைத்த கடைசி சமிக்ஞைகள் அனைத்தும் அந்த இடத்தில்தான் பதிவாகியுள்ளன,” என்று நாடாளுமன்றக் கேள்வி நேரத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

காணாமல் போன 54 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளில் காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை அல்லது இறப்புச் சான்றிதழ்களை வழங்க நேப்பாள அரசு 12 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நடைமுறையைக் கொண்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என்று காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரிடர் காலங்களில் இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான காத்திருப்புக் காலத்தைக் குறைக்குமாறு, நேப்பாளப் பிரதமரிடம் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஒரு நிர்வாக உத்தரவைக் கோரியிருந்ததாக திரு முகம்மது ஹசான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நடைமுறையைக் குறைத்து, 45 நாள்களுக்குள் இறப்புச் சான்றிதழ்களை வழங்க நேப்பாள அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் தற்போது உத்தரவின் உள்ளடக்கங்களைக் கண்காணித்து மதிப்பாய்வு செய்து வருகிறோம். இந்தப் பெரும் சோகத்தைக் கடக்க விரைவுபடுத்தப்பட்ட காலக்கெடு, குடும்ப உறுப்பினர்கள் நிர்வாக, சட்ட விவகாரங்களைத் தீர்க்க உதவும்,” என்று அமைச்சர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்
பேரிடர்பனிப்பாறைமலேசியர்