புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காஸா அமைதி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிசியும் அந்த அழைப்பை விடுத்ததாகக் கூறப்பட்டது. மாநாடு, எகிப்தின் ஷார்ம்-எல் ஷேக் நகரில் திங்கட்கிழமை (அக்டோபர் 13) நடைபெறவிருக்கிறது. பிரதமர் மோடியிடம் அமெரிக்காவும் எகிப்தும் கடைசி நிமிடத்தில் கோரிக்கையை விடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் கூறின. இருப்பினும் இந்தியப் பிரதமரின் அலுவலகம் மாநாட்டில் திரு மோடி கலந்துகொள்ளவிருப்பதை உறுதிசெய்யவில்லை.
அமைதி மாநாடு திங்கட்கிழமை பிற்பகலில் நடைபெறும் என்று எகிப்திய அதிபரின் பேச்சாளர் கூறினார். மாநாட்டுக்குத் திரு டிரம்ப்பும் திரு சிசியும் கூட்டாகத் தலைமையேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “காஸா வட்டாரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது மாநாட்டின் நோக்கம். அத்துடன் மத்திய கிழக்கில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிறுவுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தவும் அது முனையும். வட்டாரப் பாதுகாப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவும் மாநாடு நடவடிக்கை எடுக்கும்,” என்று எகிப்திய அறிக்கை குறிப்பிட்டது. அதிபர் டிரம்ப் முன்வைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் தொடர்ச்சியாக மாநாடு நடைபெறவிருக்கிறது.