கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் இணையவழி பணப் பரிமாற்ற முகவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மலேசியச் சீனர் சங்கத்தின் பொதுச் சேவை, புகார்கள் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மோசடிகளில் சிக்கிப் பாதிக்கப்படுவதைத் தவிர்க்குமாறும் மாணவர்களுக்கு அது அறிவுறுத்தியுள்ளது.
மலேசியாவில் வணிக மேலாண்மைப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பயிலும் சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், பணப் பரிமாற்ற மோசடியில் சிக்கி 6,710 சிங்கப்பூர் வெள்ளி (20,580 மலேசிய ரிங்கிட்) இழந்ததாக அப்பிரிவின் தலைவர் மைக்கேல் சோங் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அண்மையில் நடந்த அச்சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், மோசடிக்காரர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் 20,000 ரிங்கிட்டிற்கும் மேல் இழந்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரை நம்ப வைப்பதற்காக மோசடிப்பேர்வழி போலியான ‘மைகாட்’ தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அந்த நபரால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அவரால் பலர் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது நம் கடமை,” என்றார் திரு சோங்.

