மணிலா: குரங்குப் படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி புதிய ‘சிம்’ அட்டைக்குப் பதிவுசெய்ய முடிவது பிலிப்பீன்ஸ் ஆட்சியாளர்களுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்துவரும் குறுஞ்செய்திவழி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் பிலிப்பீன்சில் ‘சிம்’ அட்டைக்குப் பதிவுசெய்ய புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2022 அக்டோபரில் நடப்பிற்கு வந்த அவ்விதிகளின்படி, கைப்பேசிப் பயனர்கள் புதிய ‘சிம்’ அட்டை வாங்கும்போது தங்களது புகைப்படத்தையும் மற்ற தனிப்பட்ட விவரங்களையும் வழங்க வேண்டும்.
தற்போதைய பயனர்களும் 2023 ஜூலை 25ஆம் தேதிக்குள் அவற்றை வழங்காவிடில் அவர்களின் கைப்பேசி இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், குறுஞ்செய்திவழி மோசடிகள் குறைந்தபாடில்லை. மாறாக, இன்னும் கூடியுள்ளதாகத் தொலைத்தொடர்பு ஆணையம் அண்மையில் தெரிவித்திருந்தது.
தானியக்கச் சரிபார்ப்பு முறை செயல்விளக்கத்தின்போது, குரங்குப் படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கொண்டு, பல ‘சிம்’ அட்டைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிவதைக் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்துகாட்டினார்.
இது, ‘சிம்’ அட்டைப் பதிவுமுறையில் காணப்படும் ஓட்டைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
பிலிப்பீன்சில் 118 மில்லியனுக்கும் மேற்பட்ட ‘சிம்’ அட்டைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 25 காலக்கெடுவிற்குப் பிறகு சிறிது காலத்திற்குக் கைப்பேசிப் பயனர்களிடம் இருந்து வந்த மோசடிப் புகார்களின் எண்ணிக்கை குறைந்தது.
ஆனால், அதன்பின் மளமளவெனக் கூடி, 45,000க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகப் பிலிப்பீன்சின் தேசிய தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.