பேடோங்டார்ன் அரசாங்கத்தின் மீது மக்கள் பலருக்கு நம்பிக்கை இல்லை: ஆய்வு

1 mins read
81d38a0b-406e-4ac8-bb90-109a608ab78f
முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ரவின் புதல்வியான திருவாட்டி பேடோங்டார்ன், தமது நிர்வாகத்துடன் ரொக்க வழங்குதொகைகள் மற்றும் பொருளியல் தொடர்பான இதர உதவித் திட்டங்கள் மூலம் பொருளியலை மீட்கும் பணியில் இறங்கினார். - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்து மக்களில் பெரும்பாலானோருக்கு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத்ரவின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாகச் சிக்கலில் உள்ள நாட்டின் பொருளியலை மீட்டெடுக்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தேசிய வளர்ச்சி நிர்வாகக் கழகம் பிப்ரவரி 24 முதல் 26 வரை மேற்கொண்ட ஆய்வில், பேடோங்டார்ன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எவ்வித பெரும் மாற்றங்களோ தெளிவான முடிவுகளோ இல்லாத நிலையில் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஆற்றல் அரசாங்கத்துக்கு உள்ளதா என்று கேட்கப்பட்டது.

தங்களுக்கு ‘அவ்வளவாக நம்பிக்கை இல்லை’ என்றும் ‘அறவே நம்பிக்கை இல்லை’ என்றும் ஆய்வில் பங்கேற்றோரில் 63 விழுக்காட்டினர் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆய்வில் 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய 1,310 தாய்லாந்து நாட்டவர் பங்கேற்றதாக அறியப்படுகிறது.

முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ரவின் புதல்வியான திருவாட்டி பேடோங்டார்ன், ரொக்க வழங்குதொகைகள் மற்றும் பொருளியல் தொடர்பான இதர உதவித் திட்டங்கள் மூலம் பொருளியலை மீட்க முயன்றார்.

இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024ஆம் ஆண்டில் 2.5% மட்டுமே வளர்ச்சி கண்டது. இது பொருளியலாளர்களின் கணிப்பைவிட குறைவாக அமைந்ததுடன் அண்டை நாடான இந்தோனீசியாவின் பொருளியல் வளர்ச்சி வேகத்தில் பாதியாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்