பிரிட்டிஷ் கொலம்பியா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் மதிய வேளையில் நடைப்பயிலச் சென்ற தாயும் மகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) முதல் காணவில்லை என்று புகாரளிக்கப்பட்டது.
இயற்கை பாதுகாப்புத் துறையும் அரச கனடிய காவல்துறையும் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டன. தேடுதல் வேட்டையில் ஜெனிஃபர் பல்கராஸ் என்ற 48 வயது தாயின் உடல் திங்கட்கிழமையும் (நவம்பர் 2) அவரது 20 வயது மகள் சேலா ரீட் என்பவரது உடல் செவ்வாய்க்கிழமையும் பேலாகூலா என்ற இயற்கைவனத்தின் நடைபாதையின் வெவ்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்கள் இருவரும் கரடியால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று அவர்களது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா இயற்கை பாதுகாப்புத் துறை (பிசிசிஒஎஸ்) அதிகாரிகளும் உடல்கள் காணப்பட்ட இடங்களில் மிருகங்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தினர்.
அத்துறையின் அதிகாரிகள் பெண்களை தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் கரடிகள் அப்பகுதிகளில் நடமாடுகின்றனவா என்பதை கண்காணித்து வருகின்றனர்.
தாக்குதலில் ஒரு கரடி மட்டுமா அல்லது பல கரடிகளால் அவர்கள் தாக்கப்பட்டனரா என்பதை அறிய முடியவில்லை என்று இயற்கைப் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் ஜெஃப் டையர் தெரிவித்தார்.
மனிதர்களைத் தாக்கிய சம்பவத்தில் ஏதேனும் கரடிகள் பிடிபட்டால் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, மனிதர்கள்- விலங்கினங்கள் இருதரப்புக்கும் இடையே எழும் சர்ச்சைகளுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தாயும் மகளும் மிகவும் நெருக்கமானவர்கள் எனவும் பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளை இருவரும் நன்கு பகிர்ந்துவந்தனர் எனவும் திருவாட்டி ஜெனிபரின் சகோதரர் ஜோஷ் பல்கராஸ் ஊடகத்திடம் குறிப்பிட்டார்.
