காத்மாண்டு: உலகில் பொதுவாக மலைகள் நிலைத்தன்மையைக் குறிப்பவையாகப் பார்க்கப்படுகின்றன.
ஆனால், உலக வெப்பநிலை அதிகரித்துவருவதால் அந்த நிலைத்தன்மை ஆட்டம் காணத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், நிலச்சரிவுகள், வெள்ளம், பனிச்சரிவு போன்ற பேரிடர்கள் அதிகம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
நேப்பாள, திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் விளைவித்துள்ள அழிவும் உயிர் பலியும் அதற்கு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.
மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இமயமலைப் பள்ளத்தாக்கில் மண்ணும் பாறைகளும் நிறைந்த வெள்ளம் அலைமோதியதால் திரிஷுலி ஆற்றின் நீர்மட்டம் அரை மணிநேரத்தில் ஒன்பது மீட்டர் உயர்ந்தது.
பனிப்பாறைச் சரிவால் பேரிடர்
பனிப்பாறை சரிந்ததால் இந்தப் பேரிடர் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்தப் பேரிடரால் சேர்ந்துள்ள இடிபாடுகள் புதிதாக திடீர் வெள்ளத்தை உருவாக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. ஆய்வாளர்கள் விரைந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதுபோன்ற பேரிடர்களுக்குப் பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளை நிலையாக வைத்திருப்பது கிரேனைட் போன்ற கற்கள் அல்ல, ஐஸ் கட்டிகள்/பாறைகளே என்பது நினைவூட்டப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தால் உலகில் ஐஸ் பாறைகள் உருகிவருகின்றன. உலகின் நிலப் பகுதியில் கிட்டத்தட்ட கால் பங்கு ஐஸ் கட்டிகளால்/ஐஸ் பாறைகளால் உருவான கட்டமைப்பில் இடம்பெறுபவை.
வெப்பநிலை அதிகரிக்கும்போது ஐஸ் கட்டமைப்பு வலுவிழக்கும். அதனைத் தொடர்ந்து வசந்தகாலத்தில் பனிச்சறுக்கு சுற்றுலாத்தலத்தில் உள்ள வீட்டின் கூரையிலிருந்து பனி திடீரென விழுவதுபோல் ஐஸ் சரியும் என்று எச்சரிக்கப்படுகிறது.
திடுக்கிடும் தகவல்கள்
நான்கு கண்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக இருக்கும் ஐஸ் பாறைகள் இல்லாமல் போகும்போது ஆழமான பகுதிகள் அவற்றின் எடைக்கே ‘பலியாகும்’.
மலைப்பகுதிகள் நிலையற்றுப்போவதற்கான ஆதாரம் கூடிவருகிறது. 1950ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள பதிவுகளின்படி மலைகளில் பனிப்பாறைகள் இல்லாமல் போன ஆக மோசமான 10 ஆண்டுகளில் எட்டு ஆண்டுகள் 2016க்குப் பிறகு இடம்பெற்றுள்ளன.
இமய மலைகளின் கிழக்குப் பகுதியில் 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில், 1980களில் இருந்ததைக் காட்டிலும் ஐந்து மடங்குக்கும் மேலான மலைப்பகுதி அங்கங்கள் இடம் மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைகள் நகர்ந்துகொண்டிருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.


