மணிலா: தென்கிழக்காசிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவம்பர் 14) பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடக்கிறது.
அதன்பிறகு ஆசியான் கூட்டமைப்பு உட்பட அதன் பல பிரிவுகளின் மாநாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வரை நடைபெறவுள்ளன.
உலக அளவில் நிலவிவரும் ‘எல்நினோ’ பருவநிலைத் தாக்கம், எரிபொருள் தட்டுப்பாடு, அதன் விலையேற்றம், வட்டாரப் பாதுகாப்புப் பதற்றம் போன்ற பலவகைச் சவால்களை எதிர்கொள்ள ஆசியானின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை என்று பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அறைகூவல் விடுத்துள்ளார்.
“குறிப்பாகப் பலமுனைகளில் நாம் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆசியான் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் விளக்கினார்.
ஆசியான் மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தும் பிலிப்பீன்சின் அதிபர், கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மிக முக்கியம் என்று வலியுறுத்தினார்.
ஆசியான் உறுப்பு நாடுகளுடன் நடக்கும் மாநாட்டுக்கு இடையே அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தனிப்பட்ட சந்திப்புகளும் இடம்பெறுகின்றன. அவற்றில் மத்திய கிழக்கு பூசலால் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலை, மியன்மார் உள்நாட்டுப் போர், தென் சீனக் கடல் பதற்றம், எல்லைகடந்த தூய்மைக்கேடு போன்ற பல விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள பொருளியலைக் கொண்ட தென்கிழக்காசிய நாடுகள் ஏற்றமடைந்த எரிபொருள் விலையால் பெரும் பாதிப்படைந்ததோடு அங்குப் பணவீக்கம் அதிகரித்து வர்த்தகங்களும் இல்லங்களும் நிலைதடுமாறி வருகின்றன.
எரிபொருள் பாதுகாப்பின் கட்டுப்பாடுகளைத் தற்போதைய நெருக்கடிகள் வட்டார அளவில் வெளிப்படுத்தியிருப்பதால், பகிரக்கூடிய எண்ணெய் இருப்புகளை ஆசியான் நாடுகள் தக்கவைத்துக்கொள்ளும் திட்டம் குறித்தும் மாநாட்டில் ஆய்வு செய்யப்படும்.
ஆசியாவில் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத சமூகத்தை உருவாக்கும் ஜப்பானிய தலைமையில் வடிவமைக்கப்பட்ட திட்ட வரைவுகள் குறித்தும் ஓர் உச்ச மாநாடு அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் எரிசக்தி பாதுகாப்பு, பொருளியல் வளர்ச்சி, கரிம வெளியேற்றக் கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் விவாதிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மணிலாவில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் ஈரான்மீது புதிய தாக்குதல்களை நடத்த உத்தரவிடப்போவதில்லை என்று அண்மையில் கூறியிருந்தார். ஏனெனில் அவ்வாறு நடத்தவேண்டாம் என கத்தார் உட்பட சில நாடுகள் அவரை கேட்டுக்கொண்டுள்ளன என்பதை அவர் காரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதிபர் டிரம்பின் கூற்று எரிபொருள் சந்தை விலைகள் சற்று தணிய வழிவகுத்து எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு ஆறுதல் தந்துள்ளது.
