10 ஆண்டுகளில்லாத விலைச் சரிவு 

அமோக விளைச்சலின் எதிரொலி: பாதி விலையில் விற்கப்படும் ‘மூசாங் கிங் டுரியான்’

2 mins read
778fced5-78de-4b04-b538-eb39a37d18a5
‘மூசாங் கிங் டுரியான்’ பழங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலைச்சரிவைச் சந்தித்துள்ளன. - கோப்புப் படம்

‘மூசாங் கிங் டுரியான்’ பழங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலைச்சரிவை சந்தித்துள்ளன. அவ்வகையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் குறைவான விலையிலேயே அப்பழங்கள் விற்கப்படும் என்று சிங்கப்பூர் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த விலைச் சரிவால் தற்போது வாடிக்கையாளர்கள் பாதி விலை கொடுத்து ‘மூசாங் கிங் டுரியான்’ ரகப் பழங்களை வாங்குகின்றனர்.

மலேசியாவில் இந்த ஆண்டு இவ்வகைப் பழங்கள் அமோக விளைச்சலைக் கண்டன. அதனைத் தொடர்ந்து  ஒரு கிலோகிராம் மூசாங் கிங் டுரியான்கள் ஆகக் குறைவாக 8 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் அவற்றின் விலை கிலோவுக்கு $15லிருந்து $24ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் டுரியான் பழ விளைச்சல் பருவம் முடிவுக்கு வருகையில், விற்பனை இவ்வளவு அதிகமாக இருக்காது என்பதால், இந்த மலிவான விலை இன்னும் அதிக காலம் நீடிக்காது என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

“பெரும்பாலும் இந்த நிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று நினைக்கிறேன். டுரியான் பழங்களின் வரத்து குறைவாக இருக்கும்போது, ​​விலை ஏறத்தாழ 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரிக்கலாம்,’’  என்று கேலாங்கில் உள்ள ‘டுரியான் 36’ கடையின் உரிமையாளர் ஆல்வின் டியோ கூறினார்.

கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, டுரியான் பழங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகக் கூறிய திரு டியோ, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, நாளொன்றிற்குக் கிட்டத்தட்ட  700 கிலோகிராம் முதல் 800 கிலோகிராம் வரையிலான பழங்களை, அதாவது கூடுதலாக 20 விழுக்காடு டுரியான்களை இறக்குமதி செய்வதாகக் குறிப்பிட்டார்.

அவற்றுள் பெரும்பகுதி விற்பனையாகிவிடுகின்றன. மீதமுள்ளவை கூழ்போல ஆக்கப்பட்டு இனிப்புக் கடைகளுக்கு விற்கப்படுகின்றன.  இதற்கிடையே, இந்தக் காலகட்டத்தில் இணையம் மூலம் விநியோகம் செய்யப்படும் விற்பனையும் ஏறத்தாழ 50  விழுக்காடு கூடியுள்ளது என்றும் அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்