தோஹா: காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்த திட்டத்திற்கு முக்கிய முஸ்லிம் நாடுகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தங்கள் ஆதரவை நல்கின.
இந்தத் திட்டத்தை தாம் ஆதரிப்பதாகக் கூறிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, இதற்கு ஹமாஸ் இணங்காவிட்டால் அது பேரழிவைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகள், இத்திட்டத்தை ஏற்கும்படி ஹமாசிடம் வலியுறுத்தின.
எட்டு அரபு அல்லது முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், “காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அதிபரின் பங்கையும் அவரது உண்மையான முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்று கூறின.
உடன்பாட்டை இறுதி செய்வதற்கும் அது செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் அமெரிக்காவுடனும் சம்பந்தப்பட்ட தரப்புடனும் நேர்மறையாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபடத் தாங்கள் தயாராக உள்ளதை உறுதிப்படுத்துவதாக அவை தெரிவித்தன.
இந்த நாடுகளில் எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், துருக்கி உள்ளிட்டவை அடங்கும். இவற்றில் சில நாடுகளுக்கு இஸ்ரேல் உடனான உறவுகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், இவை அனைத்தும் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன.
சவூதி அரேபியாவும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சமரசம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்த கத்தாரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டன.
உலகின் பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளான இந்தோனீசியாவும் பாகிஸ்தானும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டன.
எதிர்கால காஸா படையின் ஒரு பகுதியாக தனது படைகளை வழங்க இந்தோனீசியா முன்வந்துள்ளது. அதேசமயம், திரு டிரம்ப்பின் ஆதரவைப் பெறவும் அமெரிக்கா உடனான தனது உறவை மேம்படுத்தவும் பாகிஸ்தான் ஆவலாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளை மாளிகையின் அறிவிப்புக்கு முன்னதாகவே எக்ஸ் தளத்தில் பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் வெளியிட்ட அறிக்கையை திரு டிரம்ப் பாராட்டினார்.
அந்த அறிக்கையில், காஸா போருக்கு முடிவுகட்டுவதற்குத் தேவையான எந்த வகையிலும் உதவ திரு டிரம்ப் முற்றிலும் தயாராக இருக்கிறார் எனத் தாம் உறுதியாக நம்புவதாக திரு ஷரிஃப் குரல்கொடுத்திருந்தார்.