நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியன்மாரிலும் தாய்லாந்திலும் நிவாரண, மீட்புப் பணிகளுக்குக் கைகொடுப்பதற்காக நன்கொடை வழங்குமாறு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுக்கும் இயக்கத்தை நடத்திவருகிறது.
இந்த இயக்கம், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) முதல் வரும் மே மாதம் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மியன்மாரிலும் தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் இருக்கும், சிங்கப்பூரில் வசித்துவரும் அந்நாடுகளைச் சேர்ந்தோருக்கு மனநல ஆதரவு வழங்கத் தயாராய் இருப்பதாகவும் சங்கம் அறிக்கை மூலம் குறிப்பிட்டது.
பினாங்கு லேனில் உள்ள செஞ்சிலுவைச் சங்க நிலையத்தில் (Red Cross House) ஞாயிற்றுக்கிழமை ‘நுழையக்கூடிய பாதுகாப்பான இடம்’ (walk-in safe space) எனப்படும் சமூக நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பங்கேற்றோருக்கு, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் 10 பேர் மனநல முதலுதவி அளித்தனர். மனநலம் தொடர்பான இதர நடவடிக்கைகளும் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
உதவ முன்வந்த மியன்மார் நாட்டவர், சிங்கப்பூரர்கள் பலரை நிகழ்ச்சி ஒன்றுசேர்த்ததாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.
அடையாளம் காண உதவும் சேவை ஒன்றை வழங்குவதற்கும் தொண்டூழியர்கள் தயார்நிலையில் இருந்தனர்.
‘குடும்பத் தொடர்புகளை மீட்டெடுப்பது’ (Restoring Family Links) என்றழைக்கப்படும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய உறவினரைத் தொடர்புகொள்வதில் சிக்கலை எதிர்நோக்கும் சிங்கப்பூர்வாசிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது அச்சேவையின் நோக்கமாகும்.
தொடர்புடைய செய்திகள்
நன்கொடை அளிக்க விரும்புவோர், வங்கிக் கடன் அட்டைகளைக் கொண்டு Giving.sg இணையத்தளம் அல்லது நன்கொடைகளுக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் தளத்தின் வாயிலாக வழங்கலாம்.
காசோலை வழங்க விரும்புவோர், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நேரடியாக, செஞ்சிலுவைச் சங்க நிலையம், 15 பினாங்கு லேன், சிங்கப்பூர் 238486 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

