மியன்மார் அதிபர் மின் ஆங் ஹ்லேங், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதாக வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தகவல் வெளிவந்துள்ளது.
சீனாவுடனான வர்த்தக மேம்பாட்டில் உறுதியளித்துள்ள அரசாங்கத்தை வழிநடத்தும் மின் ஆங் ஹ்லேங், ஜூன் 15 முதல் 19 வரை அங்குப் பயணம் மேற்கொள்வதாகச் சீனாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“அதிபர் மின் ஆங் ஹ்லேங்கின் வருகையின் மூலம் விரிவான உத்திபூர்வ ஒத்துழைப்பை ஆழப்படுத்த மியன்மாருடன் சீனா இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளது,” என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் பொறுப்பேற்ற மியன்மார் அதிபரின், இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரபூர்வப் பயணம் இது.
ஆங் சான் சூ சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய 2021 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அந்நாடு அனைத்துலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியன்மாரின் ஆயுதப் படைகள் பல்வேறு எதிர்த்தரப்புக் குழுக்களுடன் போரிட்டு வருகின்றன.
2,100 கிலோமீட்டர் நீளமுள்ள எளிதில் ஊடுருவக்கூடிய எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மியன்மாரில் அரசியல் சரிவு ஏற்படுமோ என அஞ்சும் சீனா, அங்கு இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் கிளர்ச்சிக் குழுக்களைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறது.
மியன்மாரின் கடந்த தேர்தல், ஜனநாயக முறையில் நடத்தப்பட்டதாக அந்நாடு கூறி வந்தாலும் அனைத்துலகச் சமூகம் அதனைக் குறைகூறி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆயுதப் படைகளின் தளபதியாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, மின் ஆங் ஹ்லேங் ஏப்ரலில் அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்றார். இந்த ஜனநாயக மாற்றத்தை, இராணுவ ஆட்சியின் மறுவடிவம் என ஜனநாயகக் கண்காணிப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்.
நீண்ட காலமாக முடங்கிக்கிடக்கும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்துச் சீனாவுடனான விவாதங்களை அவரது அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, மியன்மாரை மையமாகக் கொண்டு செயல்படும் கொள்கை ஆய்வுக் குழு ஒன்றின் தலைவரும், அமெரிக்கக் குடிமகனுமான மின் ஜின் கைது செய்யப்பட்டதைச் சீனாவின் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
கைதான அந்த அமெரிக்கர் உளவு பார்த்ததாகவும், சீனாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாகவும் சந்தேகிக்கப்படுவதாக சீனா கூறியுள்ளது.

