நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: அன்வாரின் கூட்டணி தோல்வி

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: அன்வாரின் கூட்டணி தோல்வி

2 mins read
31bff42d-e929-4e52-9844-99009630ff66
செரம்பானில் உள்ள அம்னோ கட்சித் தலைமையகத்தில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் (நடுவில்), அவரது அருகில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி (இடது) தேசிய முன்னணியின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் முகம்மது ஹசான் (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

செரம்பான்: மலேசியாவின் நெகிரி செம்பிலானில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடந்த மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணிக் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளது.

அந்த மாநிலத்தில் போட்டியிடப்பட்ட 36 தொகுதிகளில் 25ல் அமைத்த பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியுடன் வெற்றிபெற்றதாக அது தெரிவித்தது.

அதன்படி பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அதன் ஆட்சியை அம்மாநிலத்தில் இழந்தது. இதற்கு முன்பு அங்கு நடந்த இரண்டு தேர்தல்களில் அது வெற்றிபெற்றிருந்தது.

2025ஆம் ஆண்டு நவம்பரில் சாபா மாநிலத்தில் தோல்வியைத் தழுவி, இவ்வாண்டு ஜூலையில் ஜோகூர் மாநிலத்தில் தோல்வி தொடர்ந்து தற்போது மூன்றாம் முறையாக நெகிரி செம்பிலானிலும் திரு அன்வாரின் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.

அதிகாரபூர்வ முடிவுகளின்படி, பிரதமர் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 11 தொகுதிகளைப் பெற்றது. அது 2023ல் அங்கு 17 சட்டமன்ற இடங்களைப் பிடித்திருந்தது. அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சி 2023ல் வென்ற ஐந்து இடங்களிலிருந்து தற்போது ஏழு இடங்களைப் பெற்றுள்ளது.

“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேசிய முன்னணி, பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது,” என்று தேசிய முன்னணி தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி பெருமிதத்துடன் அன்றிரவு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

அடுத்து வரப்போகும் மலாக்கா மாநிலத் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அன்வார் வாழ்த்து

புதிய ஆட்சியமைக்கப்போகும் கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் அன்வார், தமது தலைமையிலான மலேசிய அரசாங்கம் நெகிரி செம்பிலான் மாநிலத்துக்கு அதன் முழு ஆதரவை நல்கும் என்று உறுதியளித்தார். அதோடு, கடந்த இரண்டு தவணைகள் ஆட்சியமைக்க ஆதரவு தந்த அம்மாநில மக்களுக்கு அவர் நன்றி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்மலேசியாநெகிரி செம்பிலான்வாக்காளர்கள்அன்வார் இப்ராகிம்அரசாங்கம்ஆட்சி