காத்மாண்டு: நேப்பாளத்தின் வெள்ளப்பெருக்கில் சிக்கிய இருவர் ஒன்பது நாள்களுக்குப் பிறகு நீர்மின் நிலையச் சுரங்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட சஞ்சய் ஷா, கபீர் மகர்ஜன் ஆகிய இருவரும் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நேப்பாள உள்துறை அமைச்சர் சூடான் குருங் தெரிவித்தார்.
மகர்ஜனால் தனது கை, கால்களை அசைக்க முடியவில்லை; ஆனால் ஷாவிற்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
“எனது சகோதரன் மீட்கப்பட்டச் செய்தியை ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். எங்கள் குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது,” என கபீர் மகர்ஜனின் சகோதரரான அமீர் மகர்ஜன் ராய்ட்டர் செய்தியிடம் கூறினார்.
தமக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இன்னும் வரவில்லை என்றும், ஆனால் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அப்பகுதியில் தேடல், மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக நேப்பாள ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பஸ்நெட் தெரிவித்தார்
ஆகஸ்ட் 26ஆம் தேதி நேப்பாளத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கினால் 1,250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
அந்த இயற்கைப் பேரிடரில் திரிசூலி ஆற்றுப்பகுதியின் நீர்மின் திட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.12 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய ஏறத்தாழ 900 பணியாளர்களைக் காணவில்லை. அவர்களுள் ஏறத்தாழ 500 பேர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கங்களுக்குள் கிட்டத்தட்ட 500 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அவர்களை மீட்க உயிர்வளியைச் (ஆக்சிஜன்) செலுத்தி மீட்புக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கால் 387.5 பில்லியன் நேப்பாள ரூபாய் (S$3.24 பில்லியன்) அளவுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20,000 வீடுகளைப் புதிதாகக் கட்ட வேண்டிய நிலை உள்ளது. முதல் நான்கு மாத கால மறுசீரமைப்புப் பணிகளுக்கு மட்டும் $66.7 மில்லியன் வெள்ளி தேவைப்படும் என்று நேப்பாளம் கணித்துள்ளது.


