நேப்பாளப் பேரிடர்: கண்முன்னே மனிதர்கள் இறப்பதைக் கண்ட துயரத்தில் பலர்

நேப்பாளப் பேரிடர்: கண்முன்னே மனிதர்கள் இறப்பதைக் கண்ட துயரத்தில் பலர்

2 mins read
3bc7ec54-06ad-4bfc-8828-07e1a1ac84b5
மீட்கப்பட்ட பெண்ணை அரவணைக்கும் உறவினர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2
Google News Preferred Icon

காத்மாண்டு: நேப்பாள-திபெத் எல்லையைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் சக மனிதர்கள், வீடுகள் கண்ணெதிரே அடித்துச் செல்லப்பட்ட துயரம் உயிர் பிழைத்தவர்களிடையே நிலவுகிறது.

குடிநுழைவு அதிகாரியான ராஜு புத்தாதொக்கி மலைப்பகுதியில் வசித்துவந்தார். புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 8.45 மணியளவில் அவர் இருந்த மலைப்பகுதி அதிர ஆரம்பித்தது.

பதறிப்போய் வெளியே ஓடிச்சென்றபோது காவல்துறையினரும் பாதுகாப்புக்காக ஓடுவதைக் கண்டார். பின்னர் அவ்வட்டாரத்தில் வீடுகள் ஒவ்வொன்றாக அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டார்.

திடீர் வெள்ளத்தால் புத்தாதொக்கி பார்த்தது ஓர் அங்கம் மட்டுமே.

உயிர் பிழைத்த நிம்மதியுடன் துயரம்

பேரிடரில் உயிர் தப்பியோருக்கு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு முகாம்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தாங்கள் உயிர் பிழைத்த நிம்மதி இருக்கும் அதேவேளை பலர் கண்முன்னே உயிர் விட்ட துயரம் அவர்களுக்கு உள்ளது.

மற்றொரு குடிநுழைவு அதிகாரியான பிரகா‌ஷ் கெளதமுக்கு இந்நிலை ஏற்பட்டது. தனது கால் விரலில் ஏற்பட்ட ஆழமான காயத்தைத் தான் பெரிதாகக் கருதவில்லை என்று அவர் கூறினார்.

“மேலே காட்டிலிருந்து பார்த்தபோது சடலங்கள் சிதறிக் கிடந்ததையும் வெள்ள நீரில் மிதந்ததையும் பார்க்க முடிந்தது. எனது கண்முன்னே திமுரே பகுதி சிதைந்துபோனது. வீடுகளும் குடியிருப்புப் பகுதிகளும் அடித்துச் செல்லப்பட்டன. இப்போது மண்ணும் மணலும் மட்டுமே பரந்து காணப்படுகிறது,” என்று அவர் விவரித்தார்.

பதறிப்போன சிறார்

ராம் குமார் ரானா எனும் ஆடவர் மருத்துவமனை ஒன்றில் காயமுற்ற தனது உறவினர்களைக் கவனித்துவந்தார். வெள்ளத்தின் சீற்றம் கடுமையாக இருந்தது என்றும் தப்பிக்க முயன்ற சிலர் மண்ணில் புதைந்துபோனதாகவும் அவர் தெரிவித்தார்.

“அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது வெள்ளம் அவர்களைக் கவ்வியது. ஹெலிகாப்டர்களின் உதவியோடு மீட்புக் குழுக்கள் அவர்களை வெளியே எடுத்து இங்கு (மருத்துவமனைக்கு) கொண்டு வந்தனர்,” என்ற ரானா, “நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. இளம் சிறார் பதற்றத்தில் அலறினர். சிலர் கீழே விழுந்து கைகளை உடைத்துக்கொண்டனர்,” என்றும் விளக்கினார்.

காயமடைந்த சிறார், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக ரானா தெரிவித்தார்.

குடும்பத்தாரை இழந்தவர்கள்

இவற்றையும் தாண்டி சிலர் தங்களின் நெருக்கமானவர்கள் கண்முன் அடித்துச் செல்லப்படும் துயரத்துக்கு ஆளாயினர். சிலர் தங்களின் குடும்பத்தார் அனைவரையும் இழக்க நேரிட்டது.

பெரும் பாதிப்புக்கு உள்ளான தங்கள் கிராமங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா என்ற கேள்வியும் துயரத்தில் மூழ்கியிருப்போரின் மனத்தில் நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்