நேப்பாள வெள்ளம்: ஆளில்லா வானூர்திகளில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கத் திட்டம்

நேப்பாள வெள்ளம்: ஆளில்லா வானூர்திகளில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கத் திட்டம்

2 mins read
3dc639d3-be87-437c-b567-b2339d729a32
நேப்பாளத்தின் டேவிகாட் பகுதியில் ஆளில்லா வானூர்திகளில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க காவலர்களுடன் தொண்டூழியர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். - படம்: என்ஒய்டி
Google News Preferred Icon

பிதூர்: நேப்பாளத்தைத் தாக்கிய பெருவெள்ளம், நிலச்சரிவு காரணமாக பாலங்களும் சாலைகளும் உடைந்து, மின்கம்பிகள் பிடுங்கி எறியப்பட்டன.

இதனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கான போக்குவரத்து, தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன.

இந்தப் பேரிடரில் காணாமல்போன 2,500க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போட்டேகோஷி, திரிசூலி ஆறுகளின் இருபுறமும் உள்ள மக்களுக்கு உணவுகளையும் பிற அத்தியாவசியப் பொருள்களையும் கொண்டு சேர்க்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த இயற்கைப் பேரிடரால் ஏறக்குறைய 10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா வானூர்தி மூலம் நிவாரணப் பொருள்களை விநியோகிக்க சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்ட் 29ஆம் தேதி பிற்பகல், மத்திய நேப்பாள நகரான பிதூரில் உள்ள தேவிகாட் பகுதியில் உள்ள திறந்தவெளியில் ஏறக்குறைய 12 தனியார் வானூர்தி இயக்குபவர்கள், ராணுவ தன்னார்வலர்கள், காவலர்கள் ஒன்றுகூடினர்.

திரிசூலி ஆற்றைக் கடந்து அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க இந்தச் சாதனங்களைப் பயன்படுத்த முடியுமா என்பதைச் சோதிப்பதே அவர்களின் நோக்கமாகும்.

அவர்கள் சோதித்த வானூர்தியின் இறக்கைகள் விரிக்கப்பட்டபோது, அது ஒரு பெரிய உணவருந்தும் மேசைபோல இருந்தது. அது, 100 கிலோ வரை எடையைச் சுமந்து செல்லும் திறன்கொண்டது.

சோதனையாளர்களில் சிலர் இமயமலையின் உயரமான பகுதிகளில் பொட்டலங்களை விநியோகித்த அனுபவம் வாய்ந்த வணிகச் சந்தை வானூர்தி விமானிகளாவர்.

அந்தப் பிரிவினர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வானூர்திகளில் முதல் சோதனையாக 59 கிலோ எடையுள்ள பொருள்களை ஏற்றினர்.

அரிசி, உடனடி தயாரிப்பு நூடல்ஸ், ஆடைகள் உள்ளிட்டவை பொருள்களில் அடங்கும்.

இதன் சாத்தியம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, நேப்பாள-சீன எல்லையில் உள்ள இமயமலைப் பள்ளத்தாக்கில் நீர், சேறு, பனிப் பாறைகளால் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே இருநாட்டு அதிகாரிகள் சந்தித்து விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே 27ஆம் தேதி நேப்பாளத் தலைநகரில் நடைபெற்ற கூட்டத்தில் நேப்பாளத்தைச் சேர்ந்த 10 அதிகாரிகளும் பேரிடர் ஏற்பட்ட திபெத் பகுதி உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த 12 அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அப்போது வெள்ளம், வானிலை, பனிப்பாறை தொடர்பான ஆபத்துகளைக் கண்காணித்து நிவர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்ததாக நேப்பாளத் தரப்பால் தயாரிக்கப்பட்டு ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இக்கூட்டத்திற்குப் பிறகு பனிப்பாறை அபாயங்கள், நீர் மட்டம் குறித்து சீனாவிடமிருந்து தாங்கள் எதிர்பார்த்த அளவு தகவல்கள் கிடைக்கவில்லை என்று இரண்டு நேப்பாள அதிகாரிகள் ராய்ட்டர்சிடம் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்