நேப்பாளப் பெருவெள்ளம்: நிலத்தடிப் பகுதிகளில் தேடுதல் பணி தொடர்கிறது

நேப்பாளப் பெருவெள்ளம்: நிலத்தடிப் பகுதிகளில் தேடுதல் பணி தொடர்கிறது

2 mins read
ef63988d-e918-4126-8115-ec459ce1a5ae
கீரோங் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் சாலைப் பகுதியில் காணாமல் போனவர்களை மோப்ப நாய்களின் உதவியோடு தேடிய மீட்புப் பணியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இமயமலையில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ள ஊழியர்களைத் தேடிவரும் மீட்புக் குழுவினர், உயிருடன் இருப்போரை இன்னும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் உள்ள 11 நீர்மின் திட்டப் பணிகளில் 933 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக நேப்பாள அதிகாரிகள் நம்புகின்றனர்.

நிலத்தடியில் சிக்கியுள்ளவர்களை அடையும் முயற்சியில் நீர், சேறு, இடிபாடுகளை அகற்றத் தேடுதல், மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். நிலந்தோண்டும் சாதனங்கள், தேடுதல் விளக்குகள் முதலியவற்றை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

திரிசூலி 3ஏ நீர்மின் திட்டப் பகுதியில், மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையைக் கண்டறிந்து அதன் மேற்கூரையைத் தகர்த்ததாக நேப்பாள அதிகாரிகளுக்கு மீட்புப் பணிகளில் உதவிவரும் ஆஸ்திரேலியப் புவியியலாளரும் சுரங்கப்பாதை நிபுணருமான திரு அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்தார். சுரங்கப்பாதைக்குள் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

“நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக நீர், பாறைகள், பொருள்கள் அதில் இருக்கக்கூடும். அந்தச் சுரங்கப்பாதையையும் மின் உற்பத்தி நிலையத்தையும் நாங்கள் எவ்வாறு அணுகுவது என்பதைப் பற்றி இப்போது மறுபரிசீலனை செய்து வருகிறோம்,” என்று செவ்வாய்க்கிழமை (செப் 1) சிஎன்ஏவின் ‘ஏசியா ஃபர்ஸ்ட்’ நிகழ்ச்சியில் திரு டிக்ஸ் கூறினார்.

மீட்புக் குழுவினர் இதுவரை அப்பகுதியில் யாரையும் கண்டுபிடித்ததாகத் தகவல் இல்லை.

நிலத்தடியில் சிக்கியுள்ள ஊழியர்களுக்கு நீர் கிடைக்கக்கூடும், சுரங்கப்பாதை வளாகத்திற்குள் உள்ள பெரிய இடங்களில் காற்று இருக்கவும் வாய்ப்புள்ளது என்று திரு டிக்ஸ் கூறினார்.

ஊழியர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் மேற்பகுதியிலிருந்து துளையிடுவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

அது தொடர்பை ஏற்படுத்தவும் நீர், உணவு, மருந்துகளை வழங்கி, சுரங்கத்திற்குள் சிக்கியிருப்போருக்குச் சிறிது நம்பிக்கையைக் கொடுக்கவும் உதவும் என்றும் திரு டிக்ஸ் கூறினார்.

இந்நிலையில், நேப்பாளத்திற்குள் செல்லும் கீரோங் எல்லைப்பகுதியில் உள்ள ஒரே சாலையின் இறுதிப் பகுதியைச் சீரமைக்கச் சீன மீட்புக் குழுவினர் இரவு முழுதும் தொடர் மழைக்கு இடையிலும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

சரிந்து விழும் செங்குத்துப் பாறைகளுக்கும் சீறிப்பாயும் ஆற்றுக்கும் இடையே அமைந்த குறுகிய மலைப் பள்ளத்தாக்கில் மீட்புப் பணியாளர்கள் சாலையை அமைக்கக் கடுமையாகப் போராடுகின்றனர். சீனா-நேப்பாள எல்லைப்பாதையை மீண்டும் திறப்பது மிகப் பெருஞ்சவாலாக உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்