பெய்ஜிங்: நேப்பாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனல், அவரது இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) சீனா சென்றடைந்தார்.
அங்கு அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இவ்வாண்டு மார்ச் மாதம் திரு ஷிசிரின் கட்சி நேப்பாளத்தில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, சீனாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும்.
நேப்பாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது, சீனாவுக்கு ஒருவித சலனத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
அதோடு, நாட்டின் கிழக்குப் பகுதிகளிலும், தென்சீனக் கடலிலும் சீனா அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி பல வட்டாரங்களைச் சொந்தம் கொண்டாடிவருகிறது.
“சீனா நேப்பாளத்தை அதன் அண்டை நாடுகளுக்கான வெளியுறவுக் கொள்கையில் என்றுமே முன்னிலையில் வைத்துள்ளது,” என வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்தார். நேப்பாளத்தின் தேசிய இறையாண்மைக்கும் வட்டார ஒருமைப்பாட்டுக்கும் சீனா ஆதரவு நல்கும் என்பதையும் சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தியாவுடன் 30 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நேப்பாளம் ஏற்படுத்தியுள்ள நல்லுறவு, சீனாவுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேப்பாள எல்லை
நெடுநாள்களாக நேப்பாளமும் இந்தியாவும் இருநாடுகளுக்கு இடையிலான 1,751கிலோமீட்டர் எல்லைப் பகுதி குறித்து வேறுபாடுகள் கொண்டிருந்தன. அதனைக் களைந்து புதிய உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக நேப்பாளம் இந்தியாவிடம் அண்மைய சந்திப்பின்போது தெரிவித்தது.

