காத்மாண்டு: நேப்பாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைவதில் கடுஞ்சவால்கள் இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) வியாழக்கிழமை (செப். 3) எச்சரித்துள்ளது.
சாலைகள் முற்றாகச் சேதமுற்றதால், இமயமலைக் கிராமங்களை உதவிப் பொருள்கள் சென்றடைய ஆளில்லா வானூர்திகளையும் சுமை தூக்குவோரையும் பயன்படுத்துவது குறித்து நிவாரணப் பணியாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி பனிப்பாறை சரிந்துவிழுந்ததால் ஏற்பட்ட பேரிடரில் சீன, நேப்பாள எல்லையின் இருபுறமும் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஏறக்குறைய 5,600 பேரைக் காணவில்லை என்று இரு நாடுகளும் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
“பேரழிவின் அளவு உண்மையிலேயே நம்பமுடியாததாக இருக்கிறது,” என்று ஐநா குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் லீலா பீட்டர்ஸ் யாஹியா காத்மாண்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேப்பாள, திபெத்திய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், யாத்திரீகர்கள் உட்பட குறைந்தபட்சம் 34 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
காத்மாண்டில், காணாமற்போன வெளிநாட்டினரின் குடும்பத்தினர் தகவல் தேடி மருத்துவமனைகளையும் பிணவறைகளையும் அலசி ஆராய்வதாகத் தெரிவித்தனர்.
“நான் மிகவும் நம்பிக்கையற்ற நிலையை உணர்கிறேன், பல நாள்கள் ஆகிவிட்டன,” என்று அமெரிக்கரான 53 வயது சஞ்சீவ் ராய் கூறினார்.
காணாமற்போன அமெரிக்கர்கள் கிட்டத்தட்ட 75 பேரில் அவரின் மனைவியும் ஒருவர். மனைவியைத் தேடி அவர் அமெரிக்காவிலிருந்து நேப்பாளத்திற்குச் சென்றுள்ளார்.
சீனாவிலும் நேப்பாள வெள்ளத்தில் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க அவர்களின் உறவினர்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தகவல்களைப் பெற விரும்பும் உறவினர்கள், காணாமற்போனவர்களின் நிழற்படங்களை அங்குச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


