தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவுக்கு எதிராக மேலும் 100% வரி விதிக்கப்படும்: டிரம்ப்

2 mins read
e77ca79e-ac78-489f-8b17-d2779a1370ac
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கிவிட்டது.

அரிய வகை கனிம வளங்களைச் சீனா ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த கூடுதலாக, பேரளவிலான வரிகளை அதற்கு எதிராக விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) உறுதி அளித்தார்.

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 100 விழுக்காடு வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

அதுமட்டுமல்லாது, நவம்பர் 1ஆம் தேதிக்குள் அனைத்து வகை முக்கிய மென்பொருள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றார் அவர்.

இதற்கிடையே, இன்னும் மூன்று வாரங்களில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அதிபர் டிரம்ப் சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பு தென்கொரியாவில் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், சீனாவுக்கு எதிராகத் தற்போது கூடுதல் வரி விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலனை செய்து வருவதால் அதிபர் ஸியுடனான சந்திப்பு நிகழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“சந்திப்பை நான் இன்னும் ரத்து செய்யவில்லை. சந்திப்பு தொடரும் என்று நினைக்கிறேன்,” என்று வெள்ளை மாளிகையில் கூடிய செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் தெரிவித்தார்.

இச்சந்திப்பு குறித்து பெய்ஜிங் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

தொழில்நுட்பச் சாதனங்கள் உற்பத்திக்கு அரிய வகை கனிம வளங்கள் ஏற்றுமதியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா உறுப்பினர்களுக்கு எதிராக விசா கட்டுப்பாடு, தடை மிரட்டல்

இதற்கிடையே, கப்பல்களிலிருந்து கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஐநாவைச் சேர்ந்த முகவை ஒன்று முன்வைத்த திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கும் ஐநா உறுப்பு நாடுகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடு, தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) மிரட்டல் விடுத்தார்.

இந்த வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்