வாஷிங்டன்: அதிபர் டோனால்ட் டிரம்ப் வாஷிங்டன் நகரில் எழுப்பத் திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட வளைவு, நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குத் தேவை என்ற அரசின் வாதத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பாரிஸ் நகரில் உள்ள ‘ஆர்க் டி ட்ரையோம்ப்’ வளைவை மாதிரியாகக் கொண்டு, 76 மீட்டர் உயரத்தில் வெள்ளை வெற்றி வளைவைக் கட்டும் திட்டங்களை முதன்முதலில் அறிவித்தபோது அதிபர் டிரம்ப் தேசியப் பாதுகாப்புக் காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை.
எனினும், வானூர்திகள் மற்றும் குறிபார்த்துச் சுடும் வீரர்களை அமர்த்தக்கூடிய ராணுவ வளாகமும் அந்த வளைவில் அடங்கும் என்று பின்னர் அவர் தமது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னர், வெள்ளை மாளிகையில் ஒரு நடன அரங்கம் அமைப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும் திரு டிரம்ப் தேசியப் பாதுகாப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்ததை மாவட்ட நீதிபதி தான்யா சுட்கன் சுட்டிக்காட்டினார்.
“இந்த வழக்கில் அரசு தேசியப் பாதுகாப்பு அம்சத்தை முன்வைப்பது இதுவே முதல் முறை,” என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாண்ட வெற்றி வளைவின் கட்டுமானப் பணிகளைத் தடுக்கக் கோரி, வியட்னாம் போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்கள் குழு தாக்கல் செய்த வழக்கை விசாரித்தபோது நீதிபதி சுட்கன் இவ்வாறு தெரிவித்தார்.
