வெள்ளத்துக்குத் தீர்வுகாண ஜோகூரில் புதிய பணிக்குழு

2 mins read
2d79d7b0-cc38-4ed3-a85f-adc890c6d525
ஜோகூரில் 48 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனத்த மழையால் 6 வட்டாரங்களில் கடுமையான வெள்ளம் சூழ்ந்தது. - படம்: த ஸ்டார்

ஜோகூர் அரசாங்கம் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளை ஆராய்ந்து தகுந்த தீர்வுகளைக் கண்டறிய சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது.

உள்ளூர் நகராட்சி மன்றங்கள், மத்திய அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பணிக்குழு அமைக்கப்பட்டதாக ஜோகூர் நிர்வாக ஆலோசகர் முகமது ஜாஃப்னி முகமது ‌ஷுக்கோர் கூறினார்.

தென் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (மார்ச் 22) பிற்பகல் வாக்கில் 10,630க்குக் குறைந்தது. காலை நிலவரப்படி 13, 089 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

சுங்காய் ஸ்கூடாய், சுங்காய் தெப்ராவ் ஆகிய பகுதிகளின் மேம்பாட்டுப் பணிகளையும் பணிக்குழு மறுஆய்வு செய்யும் என்றும் திரு ஜாஃப்னி சொன்னார்.

ஜோகூரில் வெள்ளப்பெருக்குத் தொடரும் ஒரு சவாலாக இருக்கிறது என்ற அவர், படிப்படியாக அதைத் தீர்த்து வைக்க உறுதிகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் ஒன்று கோத்தா திங்கி. 
மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் ஒன்று கோத்தா திங்கி.  - படம்: த ஸ்டார்

இருப்பினும், அண்மைய வெள்ளப்பெருக்கு வழக்கத்தைவிட அதிகமாக பெய்த கனத்த மழையால் ஏற்பட்டது என்றும் திரு ஜாஃப்னி தெரிவித்தார்.

வழக்கமாக ஒரு சதுர அடிக்கு ஒரு மணி நேரத்தில் 20 மில்லிமீட்டர் மழை பதிவாகும். கடந்த சில நாள்களில் மணிக்கு 160 மில்லிமீட்டர் மழை பதிவானது. அது வழக்கத்தைவிட ஆறு மடங்கு அதிகம். மழையும் விடாமல் 48 மணி நேரம் கொட்டித்தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டது.

அதன் விளைவாக ஜோகூர் பாரு, பொந்தியான், குலுவாங், கூலாய், பத்து பாகாட், கோத்தா திங்கி ஆகிய 6 வட்டாரங்கள் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

அங்கிருந்து மீட்கப்பட்ட 3,049 குடும்பங்கள் 68 தற்காலிக நிவாரண நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில பகுதிகளில் வெள்ளம் வற்றியிருப்பதால் மீட்கப்பட்டோரில் பலர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். நிவாரண நிலையங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பல இடங்களில் சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்