விலங்குகளுக்கு ‘சிடி ஸ்கேன்’ வசதியுடன் மண்டாயில் புதிய மருத்துவமனை

விலங்குகளுக்கு ‘சிடி ஸ்கேன்’ வசதியுடன் மண்டாயில் புதிய மருத்துவமனை

2 mins read
6dc17030-211a-44b1-8fb9-c6dd250e3e51
புதிய வனவிலங்குச் சுகாதாரப் பராமரிப்பு, ஆய்வு நிலையத்தில் கழுதைப்புலிக்கு (hyena) சிடி ஸ்கேன் செய்யப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மண்டாயில் ‘சிடி ஸ்கேன்’ உள்ளிட்ட நவீன வசதிகளுடன் விலங்குகளுக்கான புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

புதிய வனவிலங்குச் சுகாதாரப் பராமரிப்பு, ஆய்வு நிலையம், அடுத்துள்ள பழைய மருத்துவமனையைவிட ஒரு மடங்கு பெரியது.

இதில் அதிக வசதிகளுடன்கூடிய மருத்துவ அறைகள், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கான பெரிய அறைகள், விரிவாக்கப்பட்ட சோதனைச் சாலைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. மண்டாய், புதிய வசதிகளுக்கு செய்யப்பட்ட செலவுகளைப் பற்றித் தெரிவிக்க மறுத்துவிட்டது.

புதிய மருத்துவ சிகிச்சை அறைகள் பெரிதானது மட்டுமல்லாமல் வெவ்வேறு வனவிலங்குகளுக்குத் தேவையான வசதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன என்று மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் கால்நடை மருத்துவப் பராமரிப்பு, அறிவியல் திட்டங்களுக்கான துணைத் தலைவர் ஸி ஷங்ஷே தெரிவித்தார்.

நீரில் வாழும் விலங்குகளுக்காகச் சில அறைகளை நீரால் நிரப்ப முடியும். ஓராங் உத்தான் போன்றவற்றுக்குத் தொங்கும் ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளிர்ப் பிரதேசங்களில் வாழும் சிவப்புப் பாண்டா போன்ற விலங்குகளுக்குக் குளிர்சாதன வசதிகளுடன் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கூரைகளை நீட்டி, மடக்க முடியும். இதனால் சூரிய வெளிச்சத்தை நேரடியாகப் பெற்று விலங்குகள் விரைவில் குணமடையும் வாய்ப்பு ஏற்படும்.

இவற்றுக்கெல்லாம் மகுடமாக இங்கு ‘சிடி ஸ்கேன்னர்’ வசதி அமைந்துள்ளது. ஊடுகதிர், கணினியைப் பயன்படுத்தி படமெடுக்கும் இந்தக் கருவி மனிதர்களைப்போல விலங்குகளுக்கும் நோய்களைக் கண்டறிந்து காயம் அல்லது சிகிச்சைகளுக்குத் திட்டமிட உதவும் என்றார் ஸி.

புதிய மருத்துவமனை திறப்பதற்கு முன்பு ‘சிடி ஸ்கேன்’ செய்வதற்காக விலங்குகளை விலங்கியல் தோட்டத்திற்கு வெளியே உள்ள கால்நடை சிறப்பு மருத்துவ நிலையங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய நிலை இருந்தது. இது, விலங்குகளுக்கு ஆபத்தாகவும் காலவிரயம் ஆகும் வேலையாகவும் இருந்தது என்று திரு ஸி சொன்னார்.

“புதிய மருத்துவமனையில் ஏறக்குறைய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்,” என்றார் அவர்.

“ரத்த மாதிரிகளை எடுத்துச் சேகரித்து சோதனைகளுக்கு அனுப்பலாம், அதே நேரத்தில் ‘சிடி ஸ்கேன்’ படங்களைத் தயார் செய்யலாம், அதற்குள் ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகளும் வந்து சேர்ந்துவிடும்,” என்று திரு ஸி குறிப்பிட்டார்.

மேலும், சோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்து, சிகிச்சை அளிப்பதற்காக இரண்டாவது முறையாக விலங்குகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்குப் பதிலாக சோதனை முடிவுகளைப் பெற்று விரைவில் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மண்டாய் வளாகத்தையும், 2006ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கிய பழைய மருத்துமனையையும் மேம்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக புதிய மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விலங்குகளுக்கு சுமுகமான முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.

ஓராங் உத்தான்களுக்கு விருப்பமான ஊஞ்சல்களும் அறைகளில் செய்யப்பட்டுள்ளன.
ஓராங் உத்தான்களுக்கு விருப்பமான ஊஞ்சல்களும் அறைகளில் செய்யப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
புதிய விலங்குநல மருத்துவமனையில் லெமுவின் உடல் எடை பதிவு செய்யப்படுகிறது.
புதிய விலங்குநல மருத்துவமனையில் லெமுவின் உடல் எடை பதிவு செய்யப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்