கோலாலம்பூர்: மலேசியாவின் புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மாத வாடகைக்கான 2,000 ரிங்கிட் (595 வெள்ளி) நிதியுதவி குறித்து தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தின் சுபாங் ஜெயா வட்டாரத்தில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில் அண்மையில் எரிவாயு குழாய் வெடித்து தீ மூண்டது. அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாத வாடகைக்கான நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
தற்காலிக வீடுகளில் தங்குவதற்கான வாடகையைச் செலுத்த மாதந்தோறும் 2,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும் என்று சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதீன் ஷாரி அறிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்டோருக்கு ஆறு மாதங்கள் வரை நிதியுதவி வழங்கப்படும். 613 குடும்பங்களுக்கு மொத்தம் 7.36 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் என்று அமிருதீன் ஷாரி உறுதி அளித்திருந்தார்.
யாருக்கெல்லாம் நிதியுதவி வழங்கப்படும், எவ்வாறு நிதியுதவி பெறுவது போன்ற விவரங்களை ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என்ற அவர் சொன்னார்.
ஆனால், இன்றுவரை இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். நிதியுதவிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, அது எப்போது வழங்கப்படும் ஆகிய தகவல்கள் தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெட்ரோனாஸ், சிலாங்கூர் அரசாங்கம் இரண்டும் ஒருமுறை வழங்கிய நிதியுதவி, நிலைமையைச் சமாளிக்க உதவினாலும் அது வாடகை உள்ளிட்ட செலவுகளைக் கையாள போதாது என்று குடியிருப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தீயால் முழுமையாக அழிந்துபோன வீடுகளின் உரிமையாளர்களுக்கு பெட்ரோனாஸ் தலா 5,000 ரிங்கிட் வழங்கியது. அதேவேளை, பாதி அழிந்துபோன வீடுகளின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோருக்கு தலா 2,500 ரிங்கிட் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த மூன்று தரப்பினருக்கும் மத்திய அரசாங்கமும் அதே தொகையை வழங்கியது.
ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் 81 வீடுகள் அழிந்துபோயின, 81 வீடுகள் பாதி அழிந்துபோயின. 57 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டாலும் அவற்றின் கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படவில்லை. 365 வாகனங்களும் தீயினால் சேதமடைந்தன என்று மலேசியச் செய்திகள் தெரிவித்தன.