ஊழியர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்காததற்காக இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவற்றில் ஒன்று, இயந்திர மனிதத் தொழில்நுட்ப நிறுவனம்.
சம்பளம் தரப்படவில்லை என்று அந்நிறுவனங்களுக்கு எதிராக மனிதவள அமைச்சிடம் ஏறத்தாழ 20 புகார்கள் அளிக்கப்பட்டதாக மத்திய சேம நிதிக் கழகமும் சச்சரவு நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
ஓட்சா டிஜிட்டல், ஓட்சா ஸ்விஸ்லாக் ஹெல்த்கேர் ரொபாட்டிக்ஸ் ஆகிய அந்த நிறுவனங்கள். அவை இரண்டும் தெம்பனிஸ் நார்த் வட்டாரத்தில் செயல்படுகின்றன.
“அந்த நிறுவனங்கள் இதுவரை 13 ஊழியர்களுக்குச் சம்பள நிலுவைத்தொகையை வழங்கி உள்ளன. எஞ்சிய ஊழியர்களும் தங்களது சம்பளத்தைப் பெறுவதில் முத்தரப்புக் கூட்டணி தொடர்ந்து உதவும்,” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, மத்திய சேம நிதிப் பங்களிப்பின் ஒரு பகுதி ஊழியர்கள் கணக்கில் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதிகளையும் நிறுவனங்களிடம் இருந்து மீட்க மத்திய சேம நிதிக் கழகம் தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புச் சட்டவிதிகளை மீறிய குற்றத்தை அந்நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. அதிலும், ஓட்சா டிஜிட்டல் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.


