சோல்: சீனாவுடனான உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தப்போவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் புதன்கிழமை (ஜூலை 1) உறுதியளித்துள்ளார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பியோங்யாங்கில் அண்மையில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டுப் பேச்சுவார்த்தையை ஒரு ‘வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு’ என்று வருணித்தார் திரு கிம்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, திரு ஸிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், பெய்ஜிங்குடனான உறவைச் சீராக மேம்படுத்துவது பியோங்யாங்கின் உறுதியான நிலைப்பாடு என்று திரு கிம் கூறியதாகக் கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்தது.
“அண்மைய பியோங்யாங் உச்சநிலை மாநாடு நமக்கு இடையிலான நட்புறவையும் நம்பிக்கையையும் வலுப்படுத்திய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்,” என்று திரு கிம் கூறினார்.
இருதரப்பு உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான தங்களின் அசைக்க முடியாத உறுதியை இரு தலைவர்களும் மறு உறுதிப்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.
வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்பார்ந்த கூட்டுறவுகளை மேலும் மேம்படுத்த, திரு ஸியுடன் இணைந்துப் பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார் திரு கிம்.
பியோங்யாங்கிற்குத் திரு ஸி மேற்கொண்ட அரிய பயணத்திற்குப் பிறகு அந்தச் செய்தி வந்துள்ளது.
அந்தப் பயணத்தின்போது ரஷ்யாவுடன் அதிகரித்துவரும் வடகொரியாவின் நெருக்கமான ராணுவ உறவு போன்ற பிணைப்புகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியளித்திருந்தனர்.
உச்சநிலை மாநாட்டின்போது, இருதரப்பு உறவுக்கான வரைவுத்திட்டத்தைத் திரு கிம்மும் திரு ஸியும் ஏற்றுக்கொண்டனர். அதோடு, தங்களின் பாரம்பரிய நட்பை மிகச் சக்திவாய்ந்த, உத்திபூர்வ உறவாக மேம்படுத்தவும் அவர்கள் உறுதியளித்தனர்.
நெருக்கமான அரசதந்திரம், சட்ட அமலாக்கம், ராணுவ ஒத்துழைப்பு ஆகியவையும் ஏற்படவேண்டும் என்று திரு ஸி கேட்டுக்கொண்டதாகச் சீன அரசாங்க ஊடகங்கள் தெரிவித்தன.

