ஹாங்காங்: சீனாவில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கை, ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் (2026) முதல் காலாண்டில் 6.2 விழுக்காடு குறைந்திருக்கிறது. 2017ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இவ்வாண்டின் விகிதம் கிட்டத்தட்ட பாதியாக உள்ளது.
சீனாவில் ஆண்டின் முதல் காலாண்டில் 1.697 மில்லியன் திருமணங்கள் பதிவாயின. சீனாவின் குடிமை விவகார அமைச்சு சனிக்கிழமை (மே 9) அதனைத் தெரிவித்தது.
சீனா, அதன் மக்கள்தொகை குறித்துப் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதன் அறிகுறியாக அது பார்க்கப்படுகிறது. அங்குத் திருமணங்களும் குழந்தைப் பிறப்பு விகிதங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதே அதற்குக் காரணம்.
சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து நான்காவது ஆண்டாக 2025ல் குறைந்தது. குழந்தைப் பிறப்பு விகிதம், வரலாறு காணாத அளவுக்குச் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் நாட்டின் மக்கள்தொகை, தொடர்ந்து வீழ்ச்சி காணும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவில் தம்பதியர், பாரம்பரியமாக மணமுடித்த பிறகே குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
திருமணங்களையும் குழந்தை பெற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு சலுகைகளையும் ஆதரவுகளையும் வழங்குகிறது.

